தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய அணியின் இரு குழாம்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள குறித்த இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய அணியின் குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்தாவது டி20 போட்டியிலும் தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம்
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள்…
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய சகலதுறை வீரர்களில் ஒருவரான க்ளென் மெக்ஸ்வெல் கடந்த வருடம் (2019) ஒக்டோபர் மாதம் இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேச போட்டியுடன் தொடர் நிறைவடைவதற்கு முன்னர் தான் உள ரீதியான பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்து கிரிக்கெட் விளையாட்டிலிருந்து கால வரையரையின்றி ஓய்வினை அறிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த வருட இறுதியில் (2019) ஆரம்பமாகி நடைபெற்றுவரும் லீக் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் லீக் தொடரில் களமிறங்கி மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைவராக க்ளென் மெக்ஸ்வெல் தற்போது செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் குறித்த தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டி மீண்டும் அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளார்.
பிக்பேஷ் லீக் தொடரில் க்ளென் மெக்ஸ்வெல் தலைமையிலான மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி பல சாதனைகளுடன் தொடரில் மொத்தமாக 612 ஓட்டங்களை குவித்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், தென்னாபிரிக்க தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தவறவிடப்பட்டுள்ளார்.
பிக்பேஷ் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இடது கை விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மெத்யூ வேட் இரண்டு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியின் பின்னர் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அவுஸ்திரேலிய குழாமில் இடம்பெற்றுள்ளார். இவர் இறுதியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் 2017 ஒக்டோபரிலும், டி20 சர்வதேச போட்டியில் 2016 செப்டெம்பரிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை சொந்த மண்ணில் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் அறிவிப்பு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள…
இறுதியாக இந்திய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடிய துடுப்பாட்ட வீரர் அஷ்டன் டேர்னர், பிக்பேஷ் லீக் தொடரில் பிரகாசித்த வீரர்களான பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் மற்றும் டார்சி ஷோர்ட் ஆகியோர் இரு குழாம்களிலும் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். இறுதியாக இந்திய அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரில் ஒருநாள் அறிமுகம் பெற்று அதிலும் அசத்திய இளம் துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபுஷேன் தொடர்ந்தும் ஒருநாள் குழாமில் நீடிக்கின்றார்.
மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு டி20 சர்வதேச அறிமுகம் பெற்று இதுவரையில் 4 டி20 சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்து வந்த வேகப்பந்துவீச்சாளர் ஷேன் அப்போட் பிக்பேஷ் தொடரில் தனது திறமையை மீண்டும் நிரூபித்து காட்டியதன் மூலம் மீண்டும் அவுஸ்திரேலிய டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார்.
மேலும் இறுதியாக 2019 பெப்ரவரியில் டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாத வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் தென்னாபிரிக்க தொடருக்கான டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றுள்ளார். இவர் ஒருநாள் குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு
நியூசிலாந்து சென்றிருக்கும், இந்திய கிரிக்கெட் அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட…
இறுதியாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான டி20 சர்வதேச தொடரில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் பென் மெக்டேர்மோட் ஆகியோர் இந்திய டி20 தொடரிலும் வாய்ப்பை இழந்த நிலையில் தற்போது தென்னாபிரிக்க டி20 தொடரிலும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
தென்னாபிரிக்க தொடருக்கான 14 பேர் கொண்ட அவுஸ்திரேலிய ஒருநாள் குழாம்
ஆரோன் பிஞ்ச் (அணித்தலைவர்), அஷ்டன் அகார், அலக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர்), பெட் கம்மிண்ஸ் (உப தலைவர்), ஜொஸ் ஹேஸில்வூட், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளேன் மெக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மெத்யூ வேட், டேவிட் வோர்னர், அடம் ஸம்பா
தென்னாபிரிக்க தொடருக்கான 14 பேர் கொண்ட அவுஸ்திரேலிய டி20 குழாம்
ஆரோன் பிஞ்ச் (அணித்தலைவர்), ஷேன் எப்போட், அஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர்), பெட் கம்மிண்ஸ் (உப தலைவர்), மிட்செல் மார்ஷ், க்ளென் மெக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மெத்யூ வேட், டேவிட் வோர்னர், அடம் ஸம்பா
போட்டி அட்டவணை.
- 21 பெப்ரவரி – முதல் டி20 சர்வதேச போட்டி – ஜொஹனஸ்பேர்க்
- 23 பெப்ரவரி – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – போர்ட் எலிசபத்
- 26 பெப்ரவரி – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – கேப்டவுண்
- 29 பெப்ரவரி – முதல் ஒருநாள் சர்வதேச போட்டி – பார்ல்
- 4 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ப்ளும்பொன்டைன்
- 7 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – பேட்செப்ஸ்ட்ரூம்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<