மற்றுமொரு முன்னணி வீரரை இழக்கும் அவுஸ்திரேலியா

241

தென்னாபிரிக்கா அணியுடனான T20i தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கிளென் மெக்ஸ்வெல்லுக்குப் பதிலாக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மெதிவ் வேட் அவுஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20i மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது T20i போட்டி புதன்கிழமை (30) டர்பனில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதால் இரு அணிகளும் தங்களை உலகக் கிண்ணத்துக்கு தயார் செய்ய இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.

இந்த நிலையில், வலைப்பயிற்சியின் போது காயமடைந்த சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் தென்னாபிரிக்காவுடனான T20i தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஒருநாள் உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு கிளென் மெக்ஸ்வெல், தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார் என்று அவுஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மெக்ஸ்வெல் இடம்பெறுவார் என்றார்.

கிளென் மெக்ஸ்வெல்லின் மனைவிக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் ஒருநாள் தொடரில் இருந்து விலகிய மெக்ஸ்வெல், தற்போது காயம் காரணமாக தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதனிடையே, மெக்ஸ்வெல் தென்னாபிரிக்கா தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மெதிவ் வேட் T20i அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய தேர்வுக்குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி, ”அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20i உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக வேட் இருப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல, ஒருநாள் கிரிக்கெட்டில் அலெக்ஸ் கேரி அவுஸ்திரேலியா அணியின் முதன்மை விக்கெட் காப்பாளர் என்பதை உறுதிப்படுத்திய ஜோர்ஜ் பெய்லி, அவருக்கு காயம் ஏற்பட்டால் ஜோஸ் இங்லிஷ் அணியில் இடம்பெறுவார் என்றார்.

நீண்ட காலமாக அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடிக்காத மெதிவ் வேட், கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் அந்த அணிக்காக ஆடவில்லை.

இதனிடையே, காயம் காரணமாக மெக்ஸ்வெல் விலகியுள்ள நிலையில் அஸ்டன் டர்னர் அல்லது ஆரோன் ஹார்டி ஆகிய இருவரில் ஒருவர் மத்திய வரிசையில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது கிளென் மெக்ஸ்வெல்லும் உபாதைக்குள்ளாகியிருப்பது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<