2.39 செக்கன்களில் தெரிவாகத் தவறிய மெத்தியூ அபேசிங்க

281

கடுமையான போட்டியின் பின்னர் 50.97 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து ஒலிம்பிக் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் 2ஆவது ஹீட் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்றார் இலங்கை நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்க.

இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட மெத்தியூ அபேசிங்க அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ஆவர். அவர் பங்குகொண்ட முதலாவது போட்டி 9ஆம் திகதி இரவு 9.32 மணியளவில் நடைபெற்றது.

2ஆவது ஹீட் நீச்சல் போட்டியில் 3ஆவது லேனில் போட்டியிட்ட மெத்தியூ அபேசிங்க இறுதி 10 மீட்டரில் சிறப்பாகச் செயற்பட்டு சிறந்த போட்டியைக் கொடுத்தார். எனினும் அவரால் மூன்றாவது இடத்தையே பிடித்துக்கொள்ள முடிந்தது. அவர் மொசம்பிக் நாட்டைச் சேர்ந்த இகோர் மோக்ன் மற்றும் சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஷோன் கன் ஆகிய வீரர்களுக்கு பின்னால் முடிவுக்கோட்டைத் தொட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

முதல் இடத்தைப் பிடித்த மொசம்பிக் நாட்டைச் சேர்ந்த இகோர் மோக்ன்  50.65 செக்கன்களில் போட்டியை முடித்தார். இரண்டாம் இடத்தைப் பிடித்த சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஷோன் கன் 50.87 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்தார். இருவருக்கும் சிறந்த போட்டியைக் கொடுத்த இலங்கையின் மெத்தியூ அபேசிங்க 50.97 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து சிறிய வித்தியாசத்தில் 3ஆம் இடத்தைப் பிடித்தார்.

இது மெத்தியூ அபேசிங்கவின் சிறந்த நேரப் பிரதி அல்ல. ஹாங் கொங்கில் நடைபெற்ற  ஒலிம்பிக் தெரிவுக்கான போட்டியில் 50.53 செக்கன்களில் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல்  போட்டியை நிறைவு செய்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாகத் தெரிவானார். இலங்கை சார்பாக நீச்சல் போட்டிகளில் ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தெரிவான முதல் வீரரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சிறந்த நேரப் பிரதியைக் கொடுக்காத பொழுதிலும் நீச்சல் ஜாம்பவான்களுடன் போட்டியிட்ட மெத்தியூ அபேசிங்க 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ஹீட்ஸ் தரவரிசையில் 50ஆவது நிலையைப் பெற்றது பாராட்டத்தக்கது. இப்போட்டியில் மொத்தமாக 59 வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டி ஹீட்ஸ்  தரவரிசையில் முதலிடத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கைல் சார்மஸ் 47.90 செக்கன்களில் நிறைவு செய்து பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 2ஆம் இடத்தை ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த கெலெப் ட்ரெஸ்ஸல் 47.91 செக்கன்களில் நிறைவு செய்து பெற்றுக்கொண்டார். சென்ற முறை நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நாதன் அட்ரியன் 48.58 செக்கன்களில் நிறைவு செய்து அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட இறுதி நீச்சல் வீரரானார்.