இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான வீரர்கள் குழாத்தில் அனுபவ சகலதுறைவீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் இணைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
>> உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கப்பட்ட மதீஷ பதிரண
20 வயது நிரம்பிய இளம் வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரன இலங்கை குழாத்தில் இருந்து உபாதை காரணமாக வெளியேறிய நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராக அஞ்செலோ மெதிவ்ஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர ஆகியோர் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை குழாத்தின் மேலதிக வீரர்களாக பயணமாகிய நிலையில் இந்த இரு வீரர்களில் ஒருவராக அஞ்செலோ மெதிவ்ஸ் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
இதேநேரம் இலங்கை உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாக நெதர்லாந்து அணியுடன் விளையாடிய போட்டியில் உபாதை ஆபத்தினைச் சந்தித்திருந்த மகீஷ் தீக்ஷன இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிகளில் கலந்து கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
தீக்ஷன பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது அவர் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக எதிர்வரும் வியாழக்கிழமை (26) விளையாடவிருக்கும் போட்டியில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்றிருப்பதனை உறுதிப்படுத்துகின்றது. மகீஷ் தீக்ஷன உபாதை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண மோதலில் விளையாடுவது முன்னர் சந்தேகமாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தினை எதிர்கொள்ளும் போட்டி பெங்களூர் M. சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகின்றது.
>> மீண்டும் உபாதைச் சிக்கலில் இலங்கை அணி
இதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 2007, 2011, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் விளையாடிய உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்தினை தொடர்ச்சியாக நான்கு தடவைகள் வீழ்த்தியிருக்கின்மை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<