தொடை உபாதைக்கு முகம் கொடுத்துள்ள அஞ்செலோ மெதிவ்ஸ்

1022

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறைவீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடை உபாதைக்கு முகம் கொடுத்திருக்கின்றார்.

LPL தொடருக்கான அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், இன்றைய நாளுக்கான போட்டியில் ஓட்டம் ஒன்றினை பெற முற்பட்ட போது அஞ்சலோ மெதிவ்ஸ் தனது தொடடைகளில் வலியினை உணருவதனை அவதானிக்க முடியுமாக இருந்தது.

இதனையடுத்து அஞ்சலோ மெதிவ்ஸிற்கு தொடை உபாதை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார். பின்னர் சரிவில் இருந்த இலங்கையின் நிலைமை கருத்திற்கொள்ளப்பட்டு மெதிவ்ஸ் 8ஆவது விக்கெட்டுக்குப் பின்னர் களம் வந்து 29 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலங்கையின் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்தார்.

இதேநேரம் போட்டியின் முதல் நாள் நிறைவில் இலங்கை அணி வீரரான தனன்ஞய டி சில்வா குறிப்பிட்டதற்கு அமைய அஞ்செலோ மெதிவ்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலாவது துடுப்பாட்ட இன்னிங்ஸின் போது பந்துவீச்சில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தொடை உபாதையினை அடுத்து மெதிவ்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸின் போது களத்தடுப்பில் ஈடுபடுவதற்கும் மைதானத்திற்குள் வந்திருக்கவில்லை.

எனவே விடயங்களை வைத்துப் பார்க்கும் போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே மெதிவ்ஸ் துடுப்பாடுவதற்கு மைதானத்திற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் நாளில் வலுப் பெற்றிருக்கும் இலங்கை

மறுமுனையில் இலங்கை கிரிக்கெட் சபை, அடுத்த 24 மணி நேரங்களுக்கு மெதிவ்ஸின் நிலைமை குறித்து தொடர்ந்து அவதானிக்கும் என குறிப்பிட்டிருக்கின்றது.

கடந்த 13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் மெதிவ்ஸிற்கு, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட இந்த தொடை உபாதை மற்றுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. அஞ்செலோ மெதிவ்ஸ் கால் தசை உபாதைகளுக்கு அடிக்கடி முகம் கொடுக்கின்ற ஒரு வீரராகவும் காணப்படுகின்றார்.

இதேவேளை, 2021ஆம் ஆண்டின் மே மாதத்திற்குப் பின்னர் அணிக்கு திரும்பிய மெதிவ்ஸ் தற்போது ஏற்பட்டுள்ள தொடை உபாதையின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியில் தொடர்ந்து நீடிப்பதிலும் சந்தேகம் நிலவுகின்றது.

அதோடு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி ஆரம்மபாகும் இரண்டாவது பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு தலைவராகவும் பெயரிப்பட்டுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ், தொடை உபாதையில் இருந்து விடுபடாது போயின் அவர் இந்த தொடரில் தொடர்ந்து விளையாடுவதிலும் சந்தேகம் நிலவுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<