மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து துடுப்பாட்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே ஆகியோர் விலகியிருக்கின்றனர்.
மேற்கிந்திய தீவுகளின் சுழலில் சுருண்ட இலங்கை அணி
ட்ரினிடாட் நகரில் சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய..
ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த சுற்றுப் பயணத்தில் இருந்து விலக அவரது இரண்டாவது குழந்தையின் பிறப்பு காரணமாகவிருக்கின்றது.
நீண்ட காலம் உபாதையினால் அவதிப்பட்டு வந்த மெதிவ்ஸ், நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 31 ஓட்டங்களைப் பெற்றார்.
இதேவேளை, லஹிரு கமகேவுக்கு இந்த சுற்றுப் பயணத்தில் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது விரலில் உபாதையொன்று ஏற்பட்டிருந்தது. இதனாலேயே அவர் இலங்கை அணியிலிருந்து விலகுகின்றார். இந்த இரண்டு வீரர்களும் இன்றைய நாளில் (13) தாயகத்தினை வந்தடையவுள்ளனர்.
மெதிவ்ஸைப் போன்றே லஹிரு கமகேயும் முதல் டெஸ்டில் இலங்கை அணிக்காக பிரகாசிக்காத ஒருவராக உள்ளார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 41 ஓவர்களை வீசியிருந்த அவர் 110 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த போதிலும் எந்தவொரு விக்கெட்டினையும் கைப்பற்றவில்லை.
வெற்றிடமாகியிருக்கும் இந்த வீரர்களின் இடத்தினை நிரப்ப சகலதுறை வீரர்களான தசுன் சானக்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் இலங்கையின் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று இரவு மேற்கிந்திய தீவுகளுக்கும் பயணமாகின்றனர்.
புதிதாக அழைக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு வீரர்களும் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண கிரிக்கெட் தொடர்களில் நல்ல பதிவுகளை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கை அணியானது, ட்ரினாடில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருக்கின்றது. இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தக்கவைக்க, சென்.லூசியா நகரில் நாளை (14) ஆரம்பமாகவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி அல்லது சமநிலை என்கிற இரண்டு முடிவுகளில் ஒன்றை கட்டாயம் பெற வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி
குசல் மெண்டிஸ், குசல் பெரேரா/மஹேல உடவத்த, தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா/ஜெப்ரி வன்டர்செய், சுரங்க லக்மால், அசித்த பெர்னாந்து, லஹிரு குமார, ரங்கன ஹேரத்/அகில தனன்ஞய
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<