ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ILT20 தொடருக்கான டெஸர்ட் வைப்பர்ஷ் அணிக்காக இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரண இணைக்கப்பட்டுள்ளார்.
லசித் மாலிங்க பாணியில் பந்துவீசக்கூடிய மதீஷ பதிரண IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருவதுடன், இலங்கை அணிக்காக ஒரு T20I போட்டியில் விளையாடியுள்ளார்.
ஜனவரியில் ஆரம்பமாகவுள்ள ILT20 தொடர்!
இந்தநிலையில் வனிந்து ஹஸரங்க விளையாடவுள்ள டெஸர்ட் வைப்பர்ஷ் அணிக்காக மதீஷ பதிரண இணைக்கப்பட்டுள்ளார். வீரர்களுக்கான வரைவு ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளபோதும், ஒவ்வொரு அணிகளும் வீரர்களை இணைத்துவருகின்றது. அதன்படி, மதீஷ பதிரண அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
மதீஷ பதிரணவுடன் சரித் அசலங்க (அபு தாபி), லஹிரு குமார (அபு தாபி), சீகுகே பிரசன்ன (அபு தாபி), வனிந்து ஹஸரங்க (டெஸர்ட் வைப்பர்ஷ்), பானுக ராஜபக்ஷ (டுபாய்), தசுன் ஷானக (டுபாய்), துஷ்மந்த சமீர (டுபாய்), இசுரு உதான (டுபாய்) மற்றும் நிரோஷன் டிக்வெல்ல (டுபாய்) போன்ற இலங்கை வீரர்கள் ஏற்கனவே ILT20 அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ILT20 தொடர் ஜனவரி மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் அபு தாபி நைட் ரைடர்ஸ், டெஸர்ட் வைப்பர்ஷ், டுபாய் கெப்பிட்டல்ஸ், கல்ப் ஜயண்ட்ஸ், எம்.ஐ. எமிரேட்ஸ் மற்றும் ஷார்ஜா வொரியர்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<