விறுவிறுப்பான காலிறுதியில் ரஷ்யாவை வீழ்த்திய குரோஷியா

269
Image Courtesy - REUTERS

முடிவை தீர்மானிக்கும் இவான் ரகிடிக்கின் (Ivan RAKITIC) ஸ்பொட் கிக் மூலம் ரஷ்யாவை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என வீழ்த்திய குரோஷிய அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும்.

உலகக் கிண்ண தொடரின் கடைசி காலிறுதி போட்டியாக சொச்சியில் ரஷ்ய நேரப்படி சனிக்கிழமை (07) நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தின் மேலதிக நேரம் முடிவடையும்போது குரோஷியா மற்றும் போட்டியை நடத்தும் ரஷ்யா இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன.

நெருக்கடியின்றி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து

இந்நிலையில் முடிவை தீர்மானிப்பதற்கான பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷிய கோல்காப்பாளர் டனிஜல் சுபசின், ரஷ்ய வீரர் பெடோர் ஸ்மோலோவ் உதைத்த பந்து வலைக்குள் செல்லாமல் தடுத்தார். தொடர்ந்து மாரியோ பெர்னாண்டஸ் உதைத்த பந்து கோல்கம்பத்திற்கு வெளியே செல்ல குரோஷிய அணியின் வெற்றி உறுதியானது.   

இந்நிலையில் கடைசி ஸ்பொட் கிக்கை வலைக்குள் செலுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் ரகிடிக் அதனை கம்பத்திற்குள் புகுத்தி 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் குரோஷிய அணியை உலகக் கிண்ண அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.  

இதன் மூலம் 1990 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனாவுக்கு அடுத்து ஒற்றை உலகக் கிண்ண தொடரில் இரண்டு பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றிபெற்ற அணியாக குரோஷியா பதிவானது. எனினும் 16 அணிகள் சுற்றில் பலம் மிக்க ஸ்பெயினை பெனால்டியில் வீழ்த்திய ரஷ்ய அணிக்கு காலிறுதியில் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை.  

அரங்கில் இருந்த ரசிகர்களின் ஆதரவு கோசங்களுடன் ரஷ்யா பெரும் உற்சாகத்துடனேயே காலிறுதிப் போட்டியில் களமிறங்கியது. போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் வேகம் காட்டியதோடு ரஷ்யா, குரோஷிய பின்கள வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை காண முடிந்தது. பந்தை கடத்திச் சென்று எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதற்கு பதில் நீண்ட தூரம் பந்தை செலுத்தி வாய்ப்புகளை பெறுவதற்கே இரு அணிகளும் கவனம் செலுத்தின.

எனினும் 31 ஆவது நிமிடத்தில் ஆர்டம் ட்சியுபா வழங்கிய பந்தை பொனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த டானியல் கிறிஸ்சேவ் அதனை ரஷ்யாவுக்கு அபார கோலாக மாற்றினார். எனினும் எட்டு நிமிடங்களின் பின் அன்டரெஜ் கரமரிக் குரோஷிய அணிக்காக பதில் கோல் திருப்பினார். இதனால் முதல் பாதி ஆட்டம் தலா ஒரு கோலுடன் முடிந்தது.

முதல் பாதி: குரோஷியா 1 – 1 ரஷ்யா

ரஷ்ய அணி இந்த தொடர் முழுவதிலும் ரசிகர்களின் உற்சாகக் கரகோசத்திற்கு மத்தியிலேயே அதிர்ச்சி முடிவுகளுடன் காலிறுதி வரை முன்னேற்றம் கண்டது. காலிறுதியிலும் அந்த கரகோசங்கள் தொடர்ந்தன. அடிக்கடி அரங்கில் இருந்த ரசிகர்கள் ரஷ்ய தேசிய கீதத்தையும் பாடி வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தினர்.

உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்படும் விருதுகள்

மறுபுறம் திறமையான வீரர்களைக் கொண்ட குரோஷிய அணி நெருங்கிய சில கோல் வாய்ப்புகளை தவறவிட்டதை பார்க்க முடிந்தது. எனினும் இரண்டாவது பாதி நேரத்தில் இரு அணிகளாலும் கோல் பெற முடியாமல்போனது. இதனால் ஆட்டம் மேலதிக அரை மணி நேரத்திற்குச் சென்றது.

இதன்போதும் போட்டியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கோனர் கிக் ஒன்றை பயன்படுத்தி குரோஷிய வீரர் டொமகோச் விடா தலையால் முட்டி கோல் ஒன்றை பெற்றபோது குரோஷிய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. 100 ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட இந்த கோல் ரஷ்யா எஞ்சிய 20 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் பதில் கோல் ஒன்றை திருப்ப வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியது.

இந்நிலையில் மேலதிக நேரம் முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது ரஷ்யாவுக்கு அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. 114 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு மிக நெருங்கிய தூரத்தில் வைத்து குரோசிய வீரர் ஜோசிப் பிவாரிக்கின் கையில் பந்துபட்டதால் ரஷ்ய அணிக்கு தீர்க்கமான ப்ரீ கிக் ஒன்று கிடைத்தது.  

இதன்போது அலன் ட்சகோல் உதைத்த பந்தை மாரியோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி ரஷ்யாவுக்கு கோலை பெற்றுக் கொடுத்தார். இதனால் மேலதிக நேரம் முடியும் போது 2-2 என போட்டி சமநிலை கண்டது.  எனினும் முடிவை தீர்மானிக்கும் பெனால்டி ஷுட் அவுட்டில் பெர்னாண்டஸ் பந்தை கோல் கம்பத்திற்கு வெளியால் உதைத்தது ரஷ்யாவின் தோல்விக்கு காரணமானது.

எனினும் இம்முறை உலகக் கிண்ணத்தில் தரவரிசையில் மிக பின்தங்கிய அணியாக களமிறங்கிய ரஷ்யா ஆரம்ப போட்டியில் சவூதி அரேபியாவை 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தொடக்கம் சிறப்பாக ஆடி காலிறுதி வரை முன்னேற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கது.  

இதன்படி உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆடும் நான்கு அணிகளும் தேர்வாகியுள்ளன. இதில் முதல் அரையிறுதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இந்த போட்டி நடைபெறும்.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் இறுதிக் குழாம் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை (11) மொஸ்கோவில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முழு நேரம்: குரோஷியா 2 – 2 ரஷ்யா

கோல் பெற்றவர்கள்

குரோஷியா – அன்டரெஜ் கரமரிக் 39′, டொமகோச் விடா 100′

ரஷ்யா – டானியல் கிறிஸ்சேவ் 31′, மரியோ பெர்னாண்டஸ் 115′

பெனால்டி ஷூட் அவுட்: குரோசியா 4 – 3 ரஷ்யா   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க