இளையோர் உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இலங்கையர்

ICC Men’s U19 World Cup 2024

277

தென்னாபிரிக்காவில் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவருக்கான 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடருக்கான நடுவர் குழாத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐசிசி மொத்தமாக 20 அதிகாரிகளை இளையோர் உலகக் கிண்ணத் தொடருக்காக நியமித்துள்ளதுடன், இதில் 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப்பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த கிரேம் லெப்ரோய் மாத்திரம் போட்டி மத்தியஸ்தராக இடம்பெற்றுள்ளார். ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடரில் ஆறாவது தடவையாக அவர் போட்டி மத்தியஸ்தராக செயல்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, ஜனவரி 19ஆம் திகதி போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிகள் மோதும் முதல் போட்டியில் போட்டி மத்தியஸ்தராக கிரேம் லெப்ரோய் பணியாற்றவுள்ளார்.

அத்துடன், முதல் போட்டிக்கான கள நடுவர்களாக ரோலண்ட் பிளெக் (அயர்லாந்து) மற்றும் காசி சொஹேல் (பங்காளதேஷ்) ஆகிய இருவரும் பணியாற்றவுள்ளதுடன், மூன்றாவது நடுவராக பாகிஸ்தானின் ராஷித் ரியாஸ் வக்கார் மற்றும் நான்காவது நடுவராக ஆப்கானிஸ்தானின் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி ஆகியோர் இருப்பார்கள்.

இதேநேரம், அறிவிக்கப்பட்டுள்ள நடுவர் குழாத்தில் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி, டோனோவன் கோச், பில் கில்லெஸ்பி, காசி சொஹைல், மசுதுர் ரஹ்மான் முகுல், மைக் பர்ன்ஸ், கே.என்.ஏ. பத்மநாபன், ரோலண்ட் பிளெக், பைசல் கான் அப்ரிடி, ராஷித் ரியாஸ் வக்கார், அலாஹுதின் பலேகர், பொங்கனி ஜெலே, பெட்ரிக் கஸ்டார்ட், நைகல் டுகிட், லாங்டன் ருசேரே மற்றும் போர்ஸ்டர் முடிஸ்வா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போட்டி மத்தியஸ்தர்களாக கிரேம் லெப்ரோய், ஷைத் வாட்வல்லா, நாராயணன் குட்டி மற்றும் வெய்ன் நூன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த போட்டி அதிகாரிகள் குழாம் லீக் போட்டிகளில் மாத்திரம் பணியாற்றவுள்ளதுடன், அரையிறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் லீக் போட்டிகள் நிறைவில் அறிவிக்கப்படும்; என ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<