இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணய சதி?

699
Match-fixing allegations

இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் (SLC) நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் B மட்ட அணிகளுக்கு இடையிலான போட்டியொன்றில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான விசாரணைகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது.

மழையின் குறுக்கீடு காணப்பட்ட, களுத்துறை பெளதீக கலாசார கழகம் மற்றும் பாணதுறை விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டியின் இறுதி நாளில், 59 ஓவர்கள் வீசப்பட்டு 24 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டதோடு 603 ஓட்டங்களும் குவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு மாற்றமாக, போட்டியின் முதலாம் மற்றும் இரண்டாம் நாட்களில் சாதாரணமான முறையில் 362 (3.85 ஓட்ட வீதம்) ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்கள் மற்றும் 204 (3.83 ஒட்ட வீதம்) ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் என்ற வகையிலேயே ஓட்டம் பெறப்பட்டிருந்தன.

குறித்த போட்டி, மக்கோன சர்ரேய் மைதானத்தில் ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையில் நடைபெற்றது. இதன்போது, முறையற்ற விதத்தில் களத்தடுப்பாளர்கள் நின்றிருந்தமைக்கான புகைப்பட (Photo) ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்து, இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம், இலங்கை கிரிக்கெட்டிடம் குற்றசாட்டொன்றை முன்வைத்தது.

இப்போட்டியில் களுத்துறை நகர கழகத்தின் (இரண்டாவது இன்னிங்ஸ்) இறுதி  5 விக்கெட்டுக்களும் 171 தொடக்கம் 197 என்கிற ஓட்ட இடைவெளிக்குள் வீழ்த்தப்பட்டதோடு, அதன் பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 165 ஓட்டங்களை 13.4 ஓவர்களில் பாணதுறை கழகம் 12.24 என்கிற ஓட்ட வீதத்தில் கடந்திருந்தது.

எனவே, தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இரு கழகங்களும் கடுமையான சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும். மேலும், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் (ICC) தரம்குறைந்த முதல்தர தொடராக B மட்ட அணிகளுக்கு இடையிலான இத்தொடர் கருதப்படவும் வாய்ப்புள்ளது.  

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உப தலைவர் K. மதிவானன், இப்போட்டி தொடர்பான விரிவான விடயங்களை போட்டி நடுவர்கள் மற்றும் போட்டியின் மத்தியஸ்தர் ஆகியோரிடம் இருந்து கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளதாகவும், இந்த தொடருக்கு உரித்தான அதிகாரிகள் இந்த விடயம் குறித்து முழுமையாக ஆராய இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், இத்தொடரின் (இலங்கை பிரீமியர் லீக்) தலைவர் பந்துல திசாநாயக்க இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக இந்த விடயம் தொடர்பில் வெளிப்படையாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கிரிக்கெட் விளையாட்டின் புனிதத் தன்மைக்கு (நேர்மை) கலங்கம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகள் மற்றும் சபையின் நற்பெயரிற்கு சேறு பூசும் செயல்கள் என்பவற்றுக்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.