இம்மாதம் 24ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை மகளிர் அணியின் தலைவராக 21 வயதேயான இளம் வீராங்கனை ஹாசினி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட அனுலா வித்தியாலயத்தை சேர்ந்த இவர், அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டிகளில், மேல் மாகாண மகளிர் அணியைப் பிரிதிநிதித்துவப்படுத்தி விளையாடினார். குறித்த தொடரில் மேல் மாகாண அணி சம்பியன் பட்டத்தை வெல்லுவதற்கு தலைவியாகவும் இருந்து அணியை வழிநடத்தியிருந்தார்.
அதே நேரம், கடந்த செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலிய மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளை, ஹாசினி பெரேரா வழமையான இலங்கை அணியில் இடம் பெற்றிருக்கவில்லை. எனினும், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து மகளிர் அணியுடனான நான்கு ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் இவர் முன்னிலைத் துடுப்பாட்ட வீராங்கயைாகத் துடுப்பாடி வருகிறார்.
சமரி பொல்கம்பொல மற்றும் அசினி குலசூரிய ஆகியோருக்குப் பதிலாக எஷாணி லொகுசூரிய, யசோதா மென்டிஸ் மற்றும் உதேஷிகா ப்ரோபோதினி ஆகிய வீராங்கனைகள் புதிதாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துடனான தொடரில் அணித் தலைவியாக செயல்பட்டு வரும் இனோகா ரணவீர அணித் தலைமையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் அவர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள குழாமில் இடம்பிடித்துள்ளார்.
அதே நேரம், அவுஸ்திரேலிய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இலங்கை அணியை வழிநடத்திய ஷாமரி அத்தபத்துவும் அணியில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் குழாம்
ஹாசினி பெரேரா – தலைவர்
பிரசாதினி வீரக்கொடி – துணைத் தலைவர்
ஷாமரி அத்தபத்து
ஸ்ரீபாலி வீரக்கொடி
சுகந்திக்கா குமாரி
தினாலி மனோதரா
நிலுக்கஷி சில்வா
நிபுணி ஹன்சிகா
இனோகா ரணவீர
ஒசாதி ரணசிங்க
எஷாணி லொகுசூரிய
யசோதா மென்டிஸ்
ஹன்சிமா கருணாரத்ன
அமா காஞ்சனா
உதேஷிகா ப்ரோபோதனி
மேலதிக வீரர்கள்
இனோஷி பெர்னாண்டோ
லசந்த மதுஷானி
அனுஷ்கா சன்ஜீவனி
மல்ஷா சேஹானி