“உபாதையுடன் முதல் போட்டியில் விளையாடுவேன்” – மொர்டஷா

209

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உலகக் கிண்ணத் தொடரின் தங்களுடைய முதல் போட்டியில்  உபாதையுடன் விளையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணி தங்களுடைய முதல் உலகக் கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 2ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. குறித்தப் போட்டியில் விளையாடவுள்ள பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தசைப்பிடிப்பு உபாதைக்கு மத்தியிலும் முதல் போட்டியில் விளையாடவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண ஆரம்ப போட்டியிலேயே தென்னாபிரிக்காவுக்கு பாரிய இழப்பு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ………

மஷ்ரபீ மொர்டஷா இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியின் போது, தொடர்ச்சியாக 6 ஓவர்களை வீசிய நிலையிலேயே உபாதைக்கு உள்ளாகியுள்ளார். எனினும், உபாதையுடன் முழுமையாக 6 ஓவர்களை வீசியதுடன், 23 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார்.

இவ்வாறு உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மஷ்ரபீ மொர்டஷா தனது உபாதை முழுமையாக குணமடையாவிட்டாலும், முதல் போட்டியில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் குறிப்பிட்ட மொர்டஷா, “நான் முதல் இரண்டு ஓவர்களை வீசும் போது இவ்வாறு தசைப்பிடிப்பு நிறைய தடவைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், அதன் பின்னர் சரியாகிவிடும். ஆனால், பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மாவும், விராட் கோஹ்லியுடம் துடுப்பெடுத்தாடினர். குறித்த இருவரும் வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொள்ளக் கூடியவர்கள். இதுபோன்ற தருணங்களில் பந்து வீசுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்பதாற்காக தொடர்ச்சியாக ஆறு ஓவர்களை வீசினேன். இதில், 6வது ஓவரின் போது உபாதைக்கு முகங்கொடுத்தேன். எவ்வாறாயினும், உபாதை முழுமையாக குணமடையாவிட்டாலும் முதல் போட்டியில் விளையாடுவேன்”  என்றார்.

இந்திய அணிக்கு எதிரான குறித்த பயிற்சிப் போட்டியில் உபாதைக்கு முகங்கொடுத்த மஷ்ரபீ மொர்டஷா அதிக நேரங்களை உடைமாற்றும் அறையில் செலவளித்ததுடன், துடுப்பெடுத்தாடுவதற்கும் களமிறங்கவில்லை. இதனால் குறித்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதுமாத்திரமின்றி, இந்தப் பயிற்சிப் போட்டியின் போது மஷ்ரபீ மொர்டஷா உபாதைக்கு உள்ளாகியதுடன், வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசூர் ரஹ்மான் சிறிய உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர் கெண்டைக்கால் (Calf) உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அணி சந்தேகிக்கின்றது.

இதேவேளை, பங்களாஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பாலின் தொடைப்பகுதியில் சிறிய உபாதை ஏற்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிம் இக்பால் இந்திய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடவில்லை எனவும், அணியின் பயிற்சியின் போது, அவர் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவரது உபாதையானது அச்சுறுத்தும் வகையில் இல்லை என மஷ்ரபி மொர்டஷா தெரிவித்துள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<