T20 இறுதிப் போட்டிக்கு மாஸ் யுனிச்செலா மற்றும் கொமர்ஷல் கிரெடிட் அணிகள் தெரிவு

602
MAS Unichela and Commercial credit qualify for MCA T20 finals

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான MCA கிரிக்கெட் போட்டிகளில் இவ்வருடத்திற்கான T20 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை மாஸ் யுனிச்செலா மற்றும் கொமர்ஷல் கிரெடிட் அணிகள் பெற்றுள்ளன.

இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில் சம்பத் வங்கி மற்றும் டிமொ அணிகளை வீழ்த்தியதன் மூலமே இவ்வணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சம்பத் வங்கி எதிர் மாஸ் யுனிச்செலா

MCA மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட சம்பத் வங்கி அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை மாஸ் யுனிச்செலா அணிக்கு வழங்கியது.

அதன்படி முதலில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவ்வணி சார்பாக அணித்தலைவர் சாமர சில்வா சிறந்த முறையில் அதிரடியாக ஆடி வெறும் 25 பந்துகளுக்கு முகம்கொடுத்து ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை விளாசினார்.

அவருக்கு துணையாக டில்ஷான் 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, மாஸ் யுனிச்செலா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை குவித்தது. பந்து வீச்சில் சசித்ர பெரேரா 3 விக்கெட்டுக்களையும், ஹசன்த பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி துடுப்பாடிய சம்பத் வங்கி அணி, மிகப் பெரிய ஒரு முயற்சியை மேற்கொண்டு, இறுதி வரை போராடினாலும் தோல்வியையே சந்தித்தது.

அவ்வணி சார்பாக ருமேஷ் புத்திக 41 ஓட்டங்களையும், தினுக் விக்ரமநாயக்க 37 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி வரை போராடிய இவ்வணியினர் போட்டியின் நிறைவில் 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். பந்து வீச்சில் ஷதுர பீரிஸ் 3 விக்கெட்டுக்களையும், துனில் அபேதீர மற்றும் லஹிரு ஜயரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்  

மாஸ் யுனிச்செலா – 194/8 (20) – சாமர சில்வா 59, டில்ஷான் 36, மஹேல உடவத்த 26, சசித்ர பெரேரா 3/17, ஹசன்த பெர்னாண்டோ 2/24

சம்பத் வங்கி – 175/9 (20) – ருமேஷ் புத்திக 41, தினுக் விக்ரமநாயக்க 37, ஹசன்த பெர்னாண்டோ 28, ஷதுர பீரிஸ் 3/13, துனில் அபேதீர2/28, லஹிரு ஜயரத்ன 2/34

முடிவு – மாஸ் யுனிச்செலா அணி 19 ஓட்டங்களால் வெற்றி


டிமொ எதிர் கொமர்ஷல் கிரெடிட்

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட டிமொ அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்களாக 82 ஓட்டங்களை விளாசிய ஹஷான் துமின்து அணிக்கு மிகப்பெரிய ஒரு பங்களிப்பை வழங்கினார். அதேபோன்று, நிபுன் கருனாநாயக்க 33 ஓட்டங்களைப் பெற்றார்.

தமது இன்னிங்ஸ் முடிவில் டிமோ அணியினர் 7 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் மலின்த புஷ்பகுமார, அஷான் பிரியன்ஜன் மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 173 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய கொமர்ஷல் கிரெடிட் அணியினர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவ்வணியின் அஷான் பிரியன்ஜன் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும், ஷாமர கபுகெதர 40 ஓட்டங்களையும், மலின்த புஷ்பகுமார 32 ஓட்டங்களையும் பெற போட்டி நிறைவடைய 2 பந்துகள் எஞ்சியிருந்த வேளையில் கொமர்ஷல் கிரெடிட் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இழக்கை அடைந்தது.

எதிரணியின் பந்து வீச்சில் ரமேஷ் மென்டிஸ் 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியமையே சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

போட்டியின் சுருக்கம்

டிமொ – 172/7 (20) – ஹஷான் துமின்து 82, நிபுன் கருனாநாயக்க 33, மலின்த புஷ்பகுமார 2/16, அஷான் பிரியன்ஜன் 2/21, லஹிரு மதுசங்க 2/29

கொமர்ஷல் கிரெடிட் – 175/6 (19.4) – அஷான் பிரியன்ஜன் 65*, ஷாமர கபுகெதர 40, மலின்த புஷ்பகுமார 32, ரமேஷ் மென்டிஸ் 2/33

முடிவு – கொமர்ஷல் கிரெடிட் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி

இந்நிலையில் மாஸ் யுனிச்செலா மற்றும் கொமர்ஷல் கிரெடிட் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது.