யுனிலிவர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – B மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மாஸ் சிலுவெட்டா அணி, பவர் டெக் சிமென்ட் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி பெயார் என்ட் லவ்லி (Fair & Lovely) டிவிஷன் – B கிரிக்கெட் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
கடந்த ஒரு வாரகாலமாக சீரற்ற காலநிலையினால் பிற்போடப்பட்டு வந்த வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான டிவிஷன் – B மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, எந்தவொரு இடையூறுமின்றி கொழும்பு MCA மைதானத்தில் நேற்று (21) நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் சிலுவெட்டா அணியின் தலைவர் புத்திக சஞ்சீவ முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பவர் டெக் சிமென்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்தது. இதில் இடதுகை துடுப்பாட்ட வீரரான தினெத் திமோத்ய 53 ஓட்டங்களைப் பெற்றதோடு, வலதுகை துடுப்பாட்ட வீரரான லஹிரு ஜயகொடி (56) அரைச்சதம் கடந்தார். கொழும்பு நாலந்த கல்லூரியின் முன்னாள் தலைவரான தசுன் செனவிரத்னவின் (42) துடுப்பாட்டமும் அந்த அணிக்கு பலம் சேர்த்தது.
பந்துவீச்சில் மாஸ் சிலுவெட்டா அணி சார்பாக நிமந்த மதுஷங்க, புத்திக சஞ்சீவ மற்றும் துஷான் ஹேமன்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பவர் டெக் சிமென்ட் அணிக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தேர்வுக்…
248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பாடிய மாஸ் சிலுவெட்டா அணி, எதிரணி பந்துவீச்சாளர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு அவ்வணியின் வெற்றியை உறுதி செய்தனர். இத்தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் அசத்திய ஷெஹான் பெர்னாண்டோ 65 ஓட்டங்களையும், இஷான் நிலக்ஷ 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டதுடன், ஆரம்ப விக்கெட்டுக்காக இவ்விருவரும் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பந்துவீச்சைப் போன்று துடுப்பாட்டத்திலும் அசத்திய நிமந்த மதுஷங்க 40 ஓட்டங்களைக் குவித்து அவ்வணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.
இதன்படி 10 ஓவர்கள் எஞ்சியிருக்க, 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்று அவ்வணி 5 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவு செய்ததுடன், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – B மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடரின் சம்பியனாகவும் தெரிவானது.
பந்துவீச்சில் பவர் டெக் சிமென்ட் அணி சார்பாக திலான் நிமேஷ் மற்றும் மாலிங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
பவர் டெக் சிமென்ட் – 247/9 (50) – தினெத் திமோத்ய 53, லஹிரு ஜயகொடி 56, தசுன் செனவிரத்னவின் 42, நிமந்த மதுஷங்க 2/32, புத்திக சஞ்சீவ 2/41, துஷான் ஹேமன்த 2/49
மாஸ் சிலுவெட்டா – 249/5 (40.3) – ஷெஹான் பெர்னாண்டோ 65, இஷான் நிலக்ஷ 47, நிமந்த மதுஷங்க 40, திலான் நிமேஷ் 2/25, மாலிங்க டி சில்வா 2/41
முடிவு – மாஸ் சிலுவெட்டா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி