இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான மார்வன் அத்தபத்து கர்நாடக பீரிமியர் லீக் (KPL) T-20 தொடரில் பெலகாவி பென்டரஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இந்திய கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற கிரிக்கெட் தொடரொன்றில் பயிற்றுவிப்பாளர் குழாமில் இடம்பெற்று பணியாற்றுகின்ற 3ஆவது இலங்கை வீரராக இவர் இடம்பெறுகின்றார். முன்னதாக முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6ஆவது தடவையாக நடைபெறவுள்ள கர்நாடக பிரீமியர் லீக் T-20 தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பெங்களூரில் உள்ள 3 பிரதான மைதானங்களில் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்கவுள்ள இம்முறை போட்டித் தொடரில் பெலகாவி பென்டர்ஸ் அணியின் ஆலோசகராக மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் அவ்வணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவானின் அதிரடி சதத்துடன் இந்திய அணிக்கு இலகு வெற்றி
இலங்கை அணியின் இறுதி 9 விக்கெட்டுகளையும் வெறும் 77 ஓட்டங்களுக்குள் கைப்பற்றிய…
இந்நிலையில் மார்வன் அத்தபத்துவின் நியமனம் குறித்து அவ்வணியின் உரிமையாளர் அலி அஷ்பாக் தாரா கருத்து வெளியிடுகையில், ”இம்முறை கே.பி.எல் தொடரில் எமது அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான மார்வன் அத்தபத்துவை இணைத்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய அனுபவம் நிச்சயம் எமது வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதுடன், கிரிக்கெட் விளையாட்டின் பல்வேறு நுட்பங்களையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
இந்நிலையில் தனக்கு கிடைத்த புதிய பதவி குறித்து மார்வன் அத்தபத்து கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் பெலகாவி பென்டரஸ் அணியுடன் இணைந்துகொள்ள கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இந்த வீரர்களும் பகிர்ந்து கொள்ள எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.
எனினும், இப்போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் பெலகாவி பென்டர்ஸ் அணியினர் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை டுபாயில் சிறப்பு பயிற்சி முகாமொன்றில் கலந்துகொள்ளவுள்ளது. எனினும், குறித்த பயிற்சி முகாம் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெகப் ஓரமின் மேற்பார்வையின் கீழ் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 17 வருடங்களாக இலங்கை அணியில் விளையாடிய 46 வயதுடைய அனுபமிக்க வீரரும் முன்னாள் தலைவருமான மார்வன் அத்தபத்து, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்கள் உள்ளடங்கலாக 5,502 ஓட்டங்களையும், 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் உள்ளடங்கலாக 8,529 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டு கனடா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுனராகக் கடமையாற்றிய அவர், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரிலும் அவ்வணிக்காக பயிற்றுவிப்பில் பங்களிப்புச் செய்திருந்தார்.
மோர்க்கல், அம்லா சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்களா?
மொயின் அலியின் சிறந்த சகலதுறை ஆட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவுடனான…
இதனையடுத்து 2010ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய அத்தபத்து, 2011 உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். எனினும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி முதற்தடவையாகக் கைப்பற்றியது. இதன்போது இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய போல் பார்ப்ரஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் கிடைத்த அழைப்பை ஏற்று திடீரென தனது பதவியை இராஜினாமாச் செய்த நிலையில், இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டார்.
தனது பதவிக்காலத்தில் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை மாத்திரம் இலங்கை அணி வென்றாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான தொடர்களில் இலங்கை அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு மார்வன் அத்தபத்து தனது பதவியை இராஜினாமாச் செய்தார். எனினும், 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற T-20 உலகக் கிண்ண போட்டித் தொடரின்போது சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக அவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.