இலங்கை அணியுடன் டி20 தொடரில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணியின் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் லிண்டா ஸொன்டியினால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதற்கமைய மூன்று வீரர்களுக்கு முதல் முறையாக டி20 சர்வதேச குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முக்கிய வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அங்கு சென்றுள்ளது. அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டி20 சர்வதேச போன்றவற்றில் விளையாடி வருகின்றது.
>> தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு
சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று (16) நிறைவுக்கு வந்திருந்த ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 5-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது மிகவும் எதிர்பார்ப்பு மிக்க தொடராக அமைந்துள்ளது. குறித்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்குபற்றுவதற்கான இலங்கை அணியின் 16 பேர் கொண்ட குழாம் கடந்த வியாழக்கிழமை (14) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொடருக்காக தென்னாபிரிக்க அணியின் குழாம் பல மாற்றங்களுடன் இரு குழாம்களாக இன்று (17) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணியானது 3 வீரர்களுக்கு டி20 சர்வதேச அறிமுகத்தை வழங்கவுள்ளது. இலங்கை அணியுடன் நடைபெற்ற இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குமான குழாமில் இடம்பெற்றிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரம் டி20 அணிக்கு அறிமுக வீரர்களுள் ஒருவராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மேலும் இலங்கை அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சர்வதேச அறிமுகம் பெற்ற வேகப்பந்துவீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜே ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு சவாலான ஒரு பந்துவீச்சாளராக திகழ்ந்ததன் காரணமாக அடுத்த அறிமுக வீரராக டி20 குழாமிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அத்துடன் உள்ளக தொடரில் சிறப்பான துடுப்பாட்ட சராசரியை (41.22) கொண்டுள்ள 20 வயதுடைய இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சினெதெம்பா கியூஸ்லி எனும் வீரர் முதல் முறையாக சர்வதேச அணியின் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் குயின்டன் டி குக்கின் இடத்திற்காக இறுதி இரண்டு போட்டிகளுக்குமான குழாமில் இடம்பெற்றுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள குழாமானது, தனியாக முதல் போட்டிக்கான குழாமும், பின்னர் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளுக்குமான குழாமுமாக வெளியிடப்பட்டுள்ளது.
முதல் போட்டிக்கான குழாமின் அணித்தலைவராக வழமையான அணித்தலைவர் பாப் டு ப்ளெஸில் செயற்படவுள்ளார். அவருடன் சேர்ந்து ஏனைய அனுபவ வீரர்களும் விளையாடவுள்ளனர். கடந்த பாகிஸ்தான் அணியுடனான தொடரில் விளையாடியிருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஹென்ரிச் கிளாஸன் இலங்கை அணியுடனான தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
>> ஒருநாள் தொடரை வைட்வொஷ் செய்து வென்ற தென்னாபிரிக்கா
2016 மார்ச் மாதம் இலங்கை அணிக்கு எதிராக டி20 சர்வதேச போட்டியில் விளையாடியதன் பின்னர் 3 வருடங்களுக்கு பிறகு முதல் தடவையாக வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டைன் டி20 சர்வதேச குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியுடனான இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்குமான குழாமில் இடம்பெற்று விளையாடியிருந்த சகலதுறை வீரர் ஜே.பி டுமினி மீண்டும் டி20 அணிக்கும் அழைக்கப்பட்டுள்ளார். இம்முறை நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் அரங்கிலிருந்து இவர் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட குழாம்
பாப் டு ப்ளெஸிஸ் (அணித்தலைவர்), குயின்டன் டி குக், ஜே.பி டுமினி, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி ங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், ககிஸோ ரபாடா, தப்ரிஸ் ஷம்ஷி, டேல் ஸ்டைன், ரைஸ் வென் டர் டைசன்
இதேவேளை 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான இறுதி இரண்டு போட்டிகளுக்குமான குழாமில் முக்கிய அனுபவ வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அணித்தலைவர் பாப் டு ப்ளெஸில், குயின்டன் டி குக், இம்ரான் தாஹிர், லுங்கி ங்கிடி மற்றும் ககிஸோ ரபாடா ஆகியோருக்கே இவ்வாறு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் இடத்தை நிரப்புவதற்காக சகலதுறை வீரரான கிறிஸ் மொரிஸ், சினெதெம்பா கியூஸ்லி மற்றும் லுதொ சிபம்லா ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 5 வீரர்களின் ஓய்விற்கு 3 வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாப் டு ப்ளெஸிஸின் ஓய்வினால் அணியின் தலைவராக ஜே.பி டுமினி செயற்படவுள்ளார்.
இறுதி இரண்டு போட்டிகளுக்குமான 13 பேர் கொண்ட குழாம்
ஜே.பி டுமினி (அணித்தலைவர்), ரீஸா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிறிஸ் மொரிஸ், அன்ரிச் நோர்ட்ஜே, அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், சினெதெம்பா கியூஸ்லி, தப்ரிஸ் ஷம்ஷி, டேல் ஸ்டைன், லுதொ சிபம்லா, ரைஸ் வென் டர் டைசன்
>> திமுத் கருணாரத்னவின் சதத்தால் CCC உடனான இறுதிப் போட்டிக்கு SSC தகுதி
போட்டி அட்டவணை (இலங்கை நேரப்படி)
- 19 மார்ச் இரவு 9.30 – முதலாவது டி20 சர்வதேச போட்டி – கேப்டவுண்
- 22 மார்ச் இரவு 9.30 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – செஞ்சூரியன்
- 24 மார்ச் மாலை 6.00 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ஜொஹனர்ஸ்பேர்க்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<