இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக நான்கு மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், இடது முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக மார்க் வுட்டு;க்கு குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இது தற்போது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எதுஎவ்வாறாயினும், வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தற்போதைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழுவுடன் தொடர்பில் இருப்பார் என்று அறியப்படுகிறது. எதிர்காலத்தில் அதே பகுதியில் அவர் காயமடையாமல் இருக்க அவரது காயத்தை எவ்வாறு சரிசெய்வது என்பதை மருத்துவக் குழு தீர்மானிக்கும்.
- T20I தொடரில் சிறந்த ஆரம்பம் பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
- சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் புறக்கணிப்பா? ஐ.சி.சி. இடம் விளக்கம் கோரல்
- புதிய தலைவருடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலாந்தின் T20I அணி
‘கடந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிறகு இவ்வளவு காலம் விளையாடாமல் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது,’ என்று வுட் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறினார். ‘ஆனால் என் முழங்காலை சரிசெய்ய முடிந்ததால், நான் மீண்டும் முழு வேகத்தில் திரும்பி வருவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.’
‘அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர்கள், ஊழியர்கள், எனது இங்கிலாந்து அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், நிச்சயமாக, எங்கள் இரசிகர்களுக்கும். ஒரு அணியாக எங்களுக்கு மிகப்பெரிய ஆண்டாக இருக்கப்போகும் 2025இல் மீண்டும் திரும்பி பங்களிப்பதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் நவம்பரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<