“நான் கட்டிலில் சாய்ந்து யோசனை செய்த போது, நீயே தேடிக்கொண்ட ஒரு விடயம் இது, நீ விரும்பியது இதுதான், மறந்துவிட்டதா உனக்கு? இனி உனக்கு வீட்டுக்கும் போக இயலாது. எனவே, நீ உனக்கு இனி தேவையாக இருக்கும் விடயங்களைச் செய்ய வேண்டியது தான். ஏனெனில், இதிலிருந்து வெளியேற, உனக்கு வேறு வழிகள் எதுவும் இல்லை.” இது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்க் கோல்ஸ் தான் பாகிஸ்தான் மண்ணுக்கு 2017ஆம் ஆண்டில் விஜயம் செய்ததன் பின்னர் எண்ணியதாக கூறிய வார்த்தைகள்.
>> துடுப்பாட்ட தரவரிசையில் புதிய சாதனை படைத்த பாபர் அஸாம்
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஆலோசகராக கடமையாற்றிய மார்க் கோல்ஸ் எந்தவித சர்வதேச அணிகளையும் பயிற்றுவித்த அனுபவம் இன்றி, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க அப்போது கராச்சி வந்திருந்தார்.
மார்க் கோல்ஸ் வந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, 2017ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அப்போது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணம் தவிர்ந்த ஏனைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த முறையில் செயற்பட்டிருக்கவில்லை.
மறுமுனையில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி மார்க் கோல்ஸிற்கு முன்னர் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் எவரினையும் சந்தித்திருக்கவில்லை. கோல்ஸிற்கு பாகிஸ்தான் மகளிர் அணியின் முஸ்லிம் கலாச்சாரம் பற்றியும் தெரியாது. இது ஒரு பக்கம் இருக்க, பாகிஸ்தான் மகளிர் அணியின் வீராங்கனைகளுக்கு கோல்ஸின் தாய்மொழியான ஆங்கிலமும் சரிவர கதைக்க இயலாது. எனவே, கோல்ஸ் உடன் கலந்துரையாடுவதும் அவர்களுக்கு கடினம்.
”அப்போது 30 பாகிஸ்தான் வீராங்கனைகள் எனக்கு முன்னர் நின்றனர். அதில் சிலருக்கு ஆங்கிலம் தெரியாது. சிலர், இந்த வெள்ளைக்காரர் என்ன சொல்கின்றார் என்பது தெரியாது போல என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது வியர்வை காரணமாக நான் அணிந்திருந்த, கண்ணாடியில் புகைமூட்டமும் சூழ்ந்தது.”
>> உலகில் அதிவேகமாக பந்துவீசுகின்ற சிறந்த 10 வீரர்கள்
”நான் (அந்த சந்தர்ப்பத்தில்) அவர்களிடம் சொன்னேன். உங்களுக்கு கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால், (உலகக் கிண்ணத்தின் போது) நீங்கள் நியூசிலாந்துடன் விளையாடும் போது நான் பார்த்தேன். இன்னும் சில நாட்களில் நாம் அவர்களுடன் மீண்டும் விளையாடவுள்ளோம். அதற்கு தயாராக வேண்டும். எல்லோரிடமும் நான் கேட்டுக்கொள்வது நீங்கள் உங்களின் சிறந்ததனை வெளிப்படுத்த தயாராக இருங்கள். அந்தவகையில் நோக்கும் போது, நீங்கள் வென்றாலும், தோற்றாலும் சமநிலை செய்தாலும் நாங்கள் வென்றதாகவே கருதப்படும்.”
நியூசிலாந்து மண்ணில் உள்ளூர் கிரிக்கெட் வீரராக இருந்த மார்க் கோல்ஸ், தனது தாயக அணியினை பிரதிநிதித்துவம் செய்யாத போதும் கிரிக்கெட் விளையாட்டில் தனக்கு தொடர்ந்து இருந்த ஆர்வம் காரணமாக தன் வாழ்க்கையில் சந்தித்த பல இடையூறுகளுக்கு மத்தியில் கிரிக்கெட் பயிற்றுவிப்பை தெரிவு செய்தார்.
அதேநேரம், மார்க் கோல்ஸ் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மாற முன்னர் வனாட்டு தீவு மகளிர் அணி, மேற்கு அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஆகியவற்றுடன் பணி புரிந்திருந்த அனுபவத்தினைக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வர முன்னர் மார்க் கோல்ஸிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குறித்த தொலைபேசி அழைப்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கோல்ஸிடம் நீங்கள் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வர விருப்பமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த தொலைபேசி அழைப்பின் மூலம் யாரோ நண்பர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்திருந்தார். ஆனால், குறித்த அழைப்பு உண்மையாக இருந்தது. ஏனெனில், குறித்த தொலைபேசி அழைப்பு வந்த சிறிது நேரத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் கோல்ஸினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைத்ததனை உறுதி செய்தது.
>> Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்த மின்னஞ்சல் விசித்தரமான வாய்ப்பு ஒன்றைப் பற்றி பேசியது. அதாவது பாகிஸ்தான் மகளிர் அணியினை கோல்ஸ் பணம் எதுவுமின்றி பயிற்றுவிக்க வேண்டும். இன்னும் நியூசிலாந்தில் இருந்து கராச்சிக்கு வருவதற்கு செலவாகும் விமானச்சீட்டினையும் கோல்ஸே தனது சொந்த பணம் மூலம் கொள்வனவு செய்ய வேண்டும். பின்னர் தன்னால் முடியும் என நிரூபித்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோல்ஸிற்கு சம்பளத்துடனான ஒப்பந்தத்தை வழங்கும். கோல்ஸ் தனக்கு பயிற்சியாளர் ஆகுவதில் இருக்கும் ஆர்வத்தினை நிரூபித்தார். அதன்படி, கோல்ஸ் நியூசிலாந்தில் இருந்து பாகிஸ்தானுக்கு பறந்தார்.
தொடர்ந்து தலைமைப் பயிற்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், தனது வேலையின் முதல் நாளில் மார்க் கோல்ஸிடம் பயிற்சிக்காக வந்த பாகிஸ்தான் மகளிர் அணியில் இருந்த 30 வீராங்கனைகளும் 18 தொடக்கம் 33 வரையிலான வயதுப்பிரிவினைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அனைவரும் முஸ்லிம்கள்.
”(எனது முதல் நாளின் போது), பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் ஒருவர் உயரிய தொனியில் ஏதோ சொல்வதைக் கேட்டேன். நான் திரும்பிப் பார்த்தேன் (பயிற்சிகளில் ஈடுபட்ட) அனைவரும் கீழே தரையில் இருக்கும் புற்தரையில் அமர்ந்திருந்தனர். நான் அப்போது வீராங்கனைகளிடம், நீங்கள் அமர வேண்டாம். இன்னும் பயிற்சியினை தொடருங்கள் என்றேன். ஆனால், மற்றுமொரு பயிற்சியாளர் இது தொழுகைக்கான நேரம் எனக் கூறினார். தொடர்ந்து, நானும் அப்படியா? எனக் கேட்டு அவர்களுடன் உட்கார்ந்து விட்டேன்.”
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்காக 200 இற்கு மேலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய சனா மிர், தமது புதிய பயிற்சியாளராக மார்க் கோல்ஸ் வந்த போது எப்படி உணர்ந்தோம் என்பதனை விபரித்திருந்தார்.
>> சகலகலா வல்லவர்களாக இருந்த கிரிக்கெட் வீரர்கள்
”மார்க்கே அணிக்குள் நடுநிலை தன்மையினைக் கொண்டு வந்தார். அவரிடம் எந்த வீராங்கனைக்கும் சார்பாக செயற்படும் நிலைப்பாடு கிடையாது. அது எங்களுக்கு புத்துணர்ச்சி தரும்படியாக இருந்தது. அவர் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உண்ணிப்பாக இருந்ததோடு எமது (முஸ்லிம்) கலாச்சாரத்தினையும் மதிப்பவராக இருந்தார். இதனால், எங்களது வீராங்கனைகளுக்கு அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது.” என சனா மிர் கூறினார்.
மகளிருக்கான கிரிக்கெட் விளையாட்டு பாகிஸ்தானில் 1998ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை நாட்டு சட்டதிட்டங்கள் காரணமாக பெண்கள் அங்கே திறந்த வெளிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
இதேவேளை கோல்ஸ் பாகிஸ்தானில் பெண்கள் இரண்டாம்தர குடிமகன்கள் போல நடாத்தப்படுவதாக உணர்ந்தார். அதோடு அவரிடம் மகளிருக்கான கிரிக்கெட் விளையாட்டு என்பது பணம் வீணாக செலவழிக்கப்படுகின்ற முறை என்று சில வல்லுனவர்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டது. இன்னும் பெண்கள் வீட்டுக்குள் பிள்ளைகளை பராமரித்துக் கொண்டு இருக்க வேண்டியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கோல்ஸ் தனது வருகையின் போது பாகிஸ்தானுக்காக விளையாடிய கிரிக்கெட் வீராங்கனைகள் சிலருக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதையும் அறிந்து கொண்டார்.
கோல்ஸ் மகளிர் அணியில் இருந்த வீராங்கனை ஒருவர் ஓடுவதற்கான சரியான காற்சாப்பத்துக்களை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதனையும், கடினப்பந்து பயன்படுத்தப்பட வேண்டிய கிரிக்கெட் விளையாட்டில் வீராங்கனை ஒன்று பந்து கொள்வனவு செய்ய வசதியின்றி பொலித்தின் பையினால் ஆன பந்தினை உபயோகம் செய்வதையும் கண்டார்.
>> டோனியின் தலைவர் பதவியை காப்பாற்றிய ஸ்ரீனிவாசன்
”நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இருக்கும் பிரபல வீராங்கனைகளான சோபி டிவைன் அல்லது சூஸி பேட்ஸ் போன்ற வீராங்கனைகளை நினைத்துப்பாருங்கள். அவர்களுக்கு பயிற்சி தேவை என்றால் அவர்கள் தங்களுக்கென சொந்தப் பந்தையா உருவாக்கிக் கொள்வார்கள்?? இரண்டு நாடுகளும் இவ்வளவு பெரிதாக இருந்தும் ஏன் இந்த இடைவெளி என்று எனக்கு புரியவில்லை. ஆனால், பாகிஸ்தான் வீராங்கனைகள் தமக்கென ஒரு வழி இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் தமக்கான வழியினை உருவாக்கிக் கொள்ளும் அளவிற்கு ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.”
பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவர் இருந்தார். அவர் லாஹூருக்கு வரவேண்டும் என்றால் இரண்டு மணித்தியாலங்கள் வரை பஸ் வண்டியில் பயணிக்க வேண்டும். இந்நிலையில், குறித்த வீராங்கனையினை கிரிக்கெட் விளையாடுவதாக அவரின் கிராமத்தினை சேர்ந்த ஒருவர் காட்டிக்கொடுக்க, அந்த வீராங்கனையை அவரின் தந்தையும் சகோதரரும் குடும்பத்திற்கு அவப்பெயர் கொண்டுவந்ததற்காக அடித்த சம்பவம் ஒன்றும் பதிவாகியது. இச்சந்தர்ப்பத்தில் குறித்த வீராங்கனை தனது தலை மயிரினை கத்தரித்து ஆண்கள் போல் மாறி யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத மாதிரி முயற்சி ஒன்றைச் செய்தார்.
இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டுக்காக கடினப்பட்டு உழைத்த வீராங்கனைக்கு கடைசியில் கோல்ஸ் மூலம் பலன் கிடைத்தது.
”நாங்கள் கடைசியில் அந்த வீராங்கனையினை தேசிய அணிக்கு தேர்வு செய்தோம்.”
”தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட குறித்த வீராங்கனை சந்தோசத்தின் காரணமாக தேசிய அணியின் சீருடையுடனேயே உறங்கச் சென்றதாக அந்த வீராங்கனையுடன் இருந்த மற்றொரு வீராங்கனை தெரிவித்தார். அவருக்கு தேசிய அணியில் இணைந்தது கௌரவத்தினைக் கொடுத்திருக்க வேண்டும். அதனாலேயே அந்தப் பெண், தேசிய அணியின் ஆடைகளை அணிந்த வண்ணம் உறங்கச் சென்றிருக்க வேண்டும்.” என கோல்ஸ் கூறினார்.
கோல்ஸ் தனது பொறுப்பினை ஏற்று இரண்டு மாதங்களின் பின்னர், கோல்ஸ் இன் ஆளுகையிலான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்துடன் விளையாடச் சென்றது.
>> துடுப்பாட்டத்தில் மஹேல செதுக்கிய சிற்பங்கள்
தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் தோல்வி கோல்ஸிற்கு எதிர்மறையான எண்ணங்களை உருவாக்க அவர், தனது அணியுடன் ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்வதற்கான குறுஞ்செய்தியினை வாட்ஸப் செயலியின் ஊடாக அனுப்பியிருந்தார்.
பாகிஸ்தான் மகளிர் அணி தமது அழைப்பினை ஏற்று சந்திப்புக்கு வந்த போது அவர்களினை கோல்ஸ் ஒரு ஐஸ் கீரிம் கடைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பேசிய கோல்ஸ், ”இது எனது விருந்து. இங்கே உங்களுக்கு தேவையானது சொக்கலேட்டோ, வெனிலாவோ இல்லை ஸ்டோபரியோ என்பதை நீங்கள் தெரிவு செய்யுங்கள். நான் இவ்வாறு கூறிய பின்னர் அவர்கள் சற்றுக் குழப்பமடைந்தனர். அதன் பிறகு அந்த சந்திப்பு முடிந்தது. நீங்கள் அனைவரும் செல்லலாம், உங்களுக்கான போட்டி ஒன்று நாளை இருக்கின்றது. நான் உங்களை காலையில் சந்திக்கின்றேன்.” என்றார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டது ஏன்? என பாகிஸ்தான் மகளிர் அணியின் ஊழியர் ஒருவர் கேட்டிருந்தார். நான் அதற்கு எனக்கு ஐஸ் கீரிம் பிடித்திருந்தது. நான் தனிமையாகவும் இருந்தேன். எனவே, தனிமையினைப் போக்கிக் கொள்ள பாகிஸ்தான் வீராங்கனைகளை அழைத்தேன் என்றார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அடுத்த நாள் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி நியூசிலாந்தினை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. குறித்த போட்டியின் வெற்றி கோல்ஸிற்கும் பாகிஸ்தான் மகளிர் அணிக்கும் இடையில் சிறந்த பிணைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் வழிப்படுத்தியது.
>> மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய 5 பந்துவீச்சாளர்கள்!
குறித்த தொடரினை அடுத்து மார்க் கோல்ஸினை பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சம்பளத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. கடைசியில் தொண்டராக வந்த மார்க் கோல்ஸ் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாரளாக பதவி உயர்ந்தார்.
இதன் பின்னர் 2018, 2019ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மகளிர் அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. பாகிஸ்தான் மகளிர் அணி மேற்கிந்திய தீவுகளை ஒருநாள் தொடரில் வீழ்த்தியதுடன், தென்னாபிரிக்க வீராங்கனைகளுடன் அவர்களது மண்ணில் வைத்து நடைபெற்ற தொடரினை சமநிலை செய்தது.
இவ்வாறு ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்த பாகிஸ்தான் மகளிர் அணி, வளர்ச்சி பெறுகின்ற ஒரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மார்க் கோல்ஸ் கடந்த 2019ஆம் ஆண்டில் தனது பாட்டி இறந்ததன் பின்னர் தனது தாயகமான நியூசிலாந்துக்கு திரும்பினர். அதோடு, மார்க் கோல்ஸ் பாகிஸ்தான் மகளிர் அணியினை பயிற்றுவிப்பதும் நிறைவுக்கு வந்தது.
தனது தாயகத்திற்கு கோல்ஸ் திரும்பினாலும், அவர் தொடர்ந்தும் பாகிஸ்தான் மகளிர் அணியுடன் தொடர்ந்தும் தொடர்பினை பேணி வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க கிரிக்கெட் வீரராக தனது தாயகத்திற்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத மார்க் கோல்ஸ் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளராக சாதித்திருக்கின்றார். குறித்த சாதனை மகளிர் கிரிக்கெட்டினை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<