தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான மார்க் பெளச்சர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
மார்க் பெளச்சர் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட விடயம், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் புதிய இயக்குனரான கிரேம் ஸ்மித் மூலம் சனிக்கிழமை (14) உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதேநேரம், கடைசியாக இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அணி இயக்குனராக காணப்பட்ட எனோச் ன்கவே, மார்க் பெளச்சரின் உதவி பயிற்றுவிப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
அதேவேளை, தென்னாபிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பெளச்சர் நியமனம் செய்யப்பட்டது தொடர்பில் கிரேம் ஸ்மித் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“நான் பெளச்சரினை அணிக்குள் இணைத்திருக்கின்றேன். ஏனெனில், அவர் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் கொண்ட தென்னாபிரிக்க அணியை சிறந்த நிலைக்கு மாற்றுவார் என நினைப்பதால், அவருக்கு ஒரு கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் அதிகமான அனுபவம் இருக்கின்றது. அத்தோடு, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவற்குரிய முன்னேற்றகரமான அனுபவத்தினையும் அவர் கொண்டிருக்கின்றார்.”
இதேநேரம் கிரேம் ஸ்மித் எதிர்வரும் ஓரிரு நாட்களில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட, பந்துவீச்சு ஆலோசகர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாறவிருக்கும் மார்க் பெளச்சர் முன்னதாக தென்னாபிரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளான ஸ்வானே ஸ்பார்டன்ஸ் மற்றும் டைடன்ஸ் ஆகிய அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்க் பெளச்சரின் ஆளுகைக்குள் முதல் முறையாக வரும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இம்மாதம் 26 ஆம் திகதி அதன் சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தினை எதிர்கொள்ளவிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<