பாடசாலை அணிகள் பங்குபற்றும் 19 வயதிற்கு உட்பட்ட டிவிஷன் I கால்பந்து தொடரில் இன்று இடம்பெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இவ்வருடத்திற்கான மூன்றாம் இடத்தை நடப்புச் சம்பியன் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி பெற்றுக்கொண்டது.
போட்டி ஆரம்பமாகி 10 வது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்களுக்கு கோல் ஒன்றினைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எதிரணியின் கோல் கம்பங்களுக்கு அருகில் தமது பல வீரர்கள் இருந்த பொழுதும் அவர்களில் ஒருவரது காலில் கூட பந்து படவே இல்லை.
மீண்டும் பெனால்டியில் வீழ்ந்த ஹமீத் அல் ஹுசைனி : இறுதிப் போட்டியில் ஜோசப் கல்லூரி
மேலும் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பல வீரர்கள் சிறந்த முறையில் பந்தை பரிமாற்றி வந்து, இறுதியில் கோல் நோக்கி உதைந்த பந்தை கோல் காப்பாளர் உமேஷ் தடுத்தார்.
மீண்டும் 24ஆவது நிமிடம் சாஜித் சிறந்த முறையில் வழங்கிய பந்தை ரிஷான் கோல் நோக்கி அடித்தார். இந்த முறையும் கோல் காப்பாளர் உமேஷ் சிறந்த முறையில் தடுத்தார்.
அதன் பின்னர் 29ஆவது நிமிடம் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் அணித் தலைவர் அஞ்சன நேரடியாக கோலை நோக்கி பந்தை உதைந்தார். எனினும் தடுப்பில் இருந்த வீரர்கள் அதனைத் திசை திருப்பினர்.
37ஆவது நிமிடத்தில் ரிஷான் தனக்குக் கிடைத்த பந்தை கோல்களை நோக்கி மிகவும் சிறந்த முறையில் உதைந்தார். எனினும் பந்து கோல் கம்பங்களுக்கு மேலால் சென்றது.
அடுத்த வினாடியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர்களும் எதிரணியின் கோல் எல்லை வரை பந்தை கொண்டு வந்ததன் பின்னர் தரிந்த உதைந்த பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.
நடப்புச் சம்பியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது திருச் சிலுவைக் கல்லூரி அணி
முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (00) – (00) ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி
அதன் பின்னர் இரண்டாவது பாதி ஆரம்பமாகி ஓரிரு நிமிடங்களில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணிக்கு பல கோணர் உதை வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவற்றினால் அவர்களுக்கு கோல் பெற முடியாமல் போனது.
இரண்டாவது பாதியில் 45ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பொன்றின் போது உதைந்த பந்தை மீண்டும் பெற்ற நிசல் தரிந்த தனது அணிக்கான முதல் கோலை சிறந்த முறையில் பெற்றுக் கொடுத்தார்.
55ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசைனியின் பின்களவீரர் மோசமான முறையில் பந்துப் பரிமாறல் ஒன்றை மேற்கொள்ள, அந்தப் பந்தைப் பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா அணியின் தலைவர் அஞ்சன கோல்களுக்கு வேகமாக உதைந்தார். எனினும் அவரது இலக்கு சரியாக இருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்ந்து 66ஆவது நிமிடத்தில் உமேஷ் சஞ்சேயின் சிறந்த தடுப்பின் காரணமாக ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் மற்றொரு கோல் வாய்ப்பும் தகர்க்கப்பட்டது.
எனினும் 60ஆவது நிமிடத்தின் பின்னர் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் வீரர்களின் இடங்கள் மாற்றப்பட்டன. குறிப்பாக பின்கள வீரரும் சிறந்த உதைகளை மேற்கொள்ளும் வீரருமான கரீம் பாசில் மத்திய களத்திற்கு வந்தார். அதன் காரணமாக பல வாய்ப்புக்களை அவ்வணி பெற்றது.
எனினும், எதிரணியின் கோல்களைக் தடுக்கும் பாரிய பணிகளை மேற்கொண்ட மாரிஸ் ஸ்டெல்லா அணியின் கோல் காப்பாளர் உமேஷ் சஞ்சேய் இன்றைய போட்டியில் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றினார்.
இதன் காரணமாக போட்டியில் நிசல் தரிந்தவின் கோலுக்கு மேலதிகமாக எந்த கோலும் பெறப்படவில்லை. போட்டி 80 நிமிடங்களுக்கே இடம்பெற்றது.
முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (01) – (00) ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி
கோல்கள் பெற்றவர்கள்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
நிசல் தரிந்த 45’
Thepapare.com இன் ஆட்ட நாயகன் – மொஹமட் சாஜித் (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)
போட்டியின் பின்னர் thepapare.com இடம் பிரத்யேகமாகக் கருத்து தெரிவித்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர், ”வீரர்கள் இன்று மிகவும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தவில்லை. எனினும் வெற்றி பெற்றுள்ளனர். கோல்களைப் பெற மேலும் பல வாய்ப்புகள் இருந்தன. மத்தியகள வீரர்களின் மோசமான ஆட்டத்தினால் அந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. எனினும் திறமையான ஹமீத் அல் ஹுசைனி வீரர்களுக்கு எதிராக எமது பின்கள வீரர்களின் விளையாட்டு சிறந்த முறையில் இருந்தது” என்றார்.
அதேபோல் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் இம்ரான் எம்மிடம் ”கடந்த போட்டியைப் போன்றே நாம் இன்றும் எமக்கு கிடைத்த பல வாய்ப்புக்களை பயன்படுத்தத் தவறினோம். மறு முனையில் எமக்கு 11 ஓவ் சைட் சமிக்ஞைகள் காண்பிக்கப்பட்டன. அதிலிருந்து நாம் எவ்வாறான ஒரு போராட்டத்தை வெளிப்படுத்தியிருப்போம் என்பதை அறிந்துகொள்ளலாம். எனினும் கால்பந்தில் தோல்விகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.