ThePapare சம்பியன்ஷிப் மூன்றாம் இடத்தைப் பெற்றது புனித பத்திரிசியார் அணி

632

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டி 2-2 என சமநிலையில் நிறைவடைய, பெனால்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணியை 3-2 என வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் தொடரின் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதலாவது அரையிறுதியில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் 2-1 என்ற கோல்கள் கணக்கில் புனித ஜோசப் கல்லூரியிடம் தோல்வியடைந்திருந்தனர். மறுபுறம், புனித பத்திரிசியார் வீரர்கள் 1-0 என்ற கோல் கணக்கில் ஹமீட் அல் ஹுஸைனி அணியிடம் தோல்வியடைந்திருந்தனர்.

இந்நிலையில், தொடரின் 3ஆம் இடத்தை தெரிவு செய்வதற்காக சுகததாஸ அரங்கில் இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றது.

யாழ். வீரர்களை வீழ்த்திய ஹமீட் அல் ஹுஸைனி இறுதிப் போட்டியில்

போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் எதிரணியின் பின்கள வீரர் விட்ட தவறின்போது பந்தைப் பெற்ற பத்திரிசியார் முன்கள வீரர் ரஜிகுமார் சான்தன் மற்றொரு பின்கள வீரரின் தடுப்பில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்தி, கோல் நோக்கி உதைந்த பந்தை, மாரிஸ் ஸ்டெல்லா கோல் காப்பாளர் கிரகாஷ் பெரேரா தடுத்தார்.  

தொடர்ந்து 26ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா அணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து உள்ளனுப்பிய பந்தை சான்தன் வந்த வேகத்தில் கோல் நோக்கி உதைய, பிரகாஷின் தடுப்பினால் பந்து மைதானத்திதை விட்டு வெளியேறியது.  

அதிக நேரம் எதிரணியின் எல்லையில் ஆதிக்கம் செலுத்திய யாழ் வீரர்கள் போட்டியின் 33ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பெற்றனர். மத்திய களத்தில் நிலவிய பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் கோல் திசைக்கு செலுத்தப்பட்ட பந்தை அபீசன் கோலுக்குள் ஹெடர் செய்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

மீண்டும் 44ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா அணியின் கோல் எல்லைக்குள் செலுத்தப்பட்ட பந்தை, அவ்வணியின் பின்கள வீரர் சாஜித் அங்கிருந்து தட்டிவிட, பத்திரிசியார் அணியின் ஹமில்டன் ஹெயின்ஸ் பந்தைப் பெற்று உள்ளனுப்பினார். இதன்போது, கோலுக்கு அருகில் இருந்த அபீசன் பந்தை பாய்ந்து ஹெடர் செய்து அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

சலன பிரமன்தவின் கடைசி நேர கோலினால் புனித ஜோசப் இறுதிப் போட்டியில்

முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில், மாரிஸ் ஸ்டெல்லா வீரர் மொஹமட் சிபான் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்று கோல் நோக்கி வேகமாக உதைந்தார். பந்து பத்திரிசியார் கோல் காப்பாளர் கிஜுமனின் தடுப்பில் பட்டு உயர்ந்து சென்ற பந்து கம்பங்களுக்குள் போக, நீர்கொழும்பு வீரர்கள் தமக்கான முதல் கோலைப் பெற்றனர்.

முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 2 – 1 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் எதிரணியின் கோல் திசைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை வேகமாகச் சென்று பெற்ற மொஹமட் சிபான், மேற்கொண்ட முதல் முயற்சியை கிஜுமன் தடுத்தார். அதன்போது கிஜுமனின் கைகளில் இருந்து விடுபட்ட பந்தை மீண்டும் பெற்ற சிபான், தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

மீண்டும் 52ஆவது நிமிடத்தில் மைதானத்தின் ஒரு திசையில் இருந்து பந்தை எடுத்து முன்னோக்கிச் சென்ற சிபான், கோல் திசைக்குள் அதனைச் செலுத்தினார். அதனை மாரிஸ் ஸ்டெல்லா அணித் தலைவர் நிசல் தாரிந்த கோலுக்குள் உதைகையில், கிஜுமன் தடுத்தார்.

மாரிஸ் ஸ்டெல்லா அணி கோலின் ஒரு திசையில் இருந்து உயர்த்தி செலுத்தப்பட்ட பந்தை கோலுக்கு அணிமையில் இருந்து ஹெயின்ஸ் ஹெடர் செய்ய, பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

65ஆவது நிமிடத்தில் பத்திரிசியார் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்தை அவ்வணி வீரர் கோல் நோக்கி ஹெடர் செய்ய, கோலுக்கு அணிமையில் இருந்த மாரிஸ் ஸ்டெல்லா பின்கள வீரர் பந்தை அங்கிருந்து வெளியேற்றினார்.

Photos: Hameed Al Husseinie College vs St. Patrick’s College | Semi Final | ThePapare Football Championship 2018

அடுத்த சில நிமிடங்களில் சான்தன் கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தும் தடுப்பு வீரரின் உடம்பில் பட்டு திசை மாறியது.

72 நிமிடங்களின் பின்னர் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து ஹெயின்ஸ் உதைந்த பந்து கோலின் ஒரு பக்க கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

80 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து ரஜிந்து பெர்னாண்டோ உதைந்த பந்தை கிஜுமன் கோலுக்கு அண்மையில் இருந்து பாய்ந்து வெளியே தட்டி விட்டார்.  

அடுத்த 10 நிமிடங்கள் இரு அணிகளது முயற்சிகளும் கோல் பெறாத நிலையில் நிறைவுற, 2 நிமிடங்களாக வழங்கப்பட்ட உபாதையீடு நேரத்திலும் எந்தவித மாற்றமும் இடம்பெறவில்லை.

எனவே, ஆட்டம் 2-2 என சமநிலையில் நிறைவடைந்தது.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 2 – 2 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பின்போது, 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வீரர்கள் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் முதலாவது பருவகாலத் தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்

பெனால்டி முடிவு: புனித பத்திரிசியார் கல்லூரி 3 – 2 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

  • ThePapare.com இன் ஆட்ட நாயகன் –  S அபீசன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி – S அபீசன் 33′ & 44′

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி –  மொஹமட் சிபான் 45+2′ & 47′

>>போட்டியை மீண்டும் பார்வையிட<<