தற்பொழுது கிரிக்கெட்டில் எழுச்சி பெற்றுள்ள நீர்கொழும்பு புனித மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, இந்த பருவ கால 19 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் வென்று தமது கன்னி சம்பியன் பட்டதை கைப்பற்றி வரலாறு படைப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறது.
புனித மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சுருக்கமான வரலாறு
முன்னொரு காலத்தில் புனித மரியாள் கல்லூரி என அறியப்பட்ட மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, மரிஸ்ட் சகோதரர்களால் பொறுப்பெடுக்கப்பட்டு, பின்னர் 1922ஆம் ஆண்டு பெயர் மற்றம் செய்யப்பட்டது. எனினும், கிரிக்கெட் விளையாட்டு 90களிலேயே மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பற்றி குறிப்பிடும் பொழுது, முக்கியமாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப் படுத்திய நட்சத்திர வீரர் கிரேம் லப்ரரோயை நினைவு படுத்தலாம். இவர் 1986ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர். அதேபோல், அண்மைய காலங்களில் தேசிய அணியில் சிறப்பித்த தசுன் ஷானக மற்றும் துஷ்மந்த சமீரா போன்ற திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை இலங்கை தேசிய அணிக்கு உருவாக்கிக் கொடுத்த பெருமை இப்பாடசாலைக்கு உண்டு.
2016/2017 பருவ காலப் போட்டிகள்
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் எதிர்ப்பார்ப்புகளை நனவாக்க வேண்டுமென்றால், தாம் அங்கம் வகிக்கும் D குழுவில் அதிகமான போட்டிகளில் வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இவ்வணி உள்ளாகியுள்ளது.
மாரிஸ் ஸ்டெல்லா, தங்களுடைய முதல் பருவ கால போட்டியினை, ஜனாதிபதி கல்லூரியுடன் வெற்றி தோல்வியின்றி சமநிலையான முடிவுடன் ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஒரு வெற்றியை சுவைத்த அணி, அடுத்த போட்டியில் எதிர்பார்க்காத வகையில், புனித ஜோசப் கல்லூரியுடன் தோல்வியை சந்தித்தது. ஆகவே, அவ்வணி மறுபடியும் எழுச்சி பெற்று பருவக் கால போட்டிகளில் தொடர்ந்து இருக்க, முழு முயற்சியுடன் மீண்டும் வெற்றிகளை பெற வேண்டும்.
மாரிஸ் ஸ்டெல்லா அணியின் முக்கிய வீரர்கள்
நான்கு வருடங்களாக மாரிஸ் ஸ்டெல்ல கல்லூரியின் முதல் பதினொருவர் கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து விளையாடும் தற்போதைய அணித்தலைவர் சசிந்து கோலம்பகே, அனுபவத்தில் மூத்தவராவர். இறுதியாக நடைபெற்ற பருவ கால போட்டிகளில், 13 போட்டிகளில் விளையாடி 550 ஓட்டங்கள் மற்றும் 45 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இம்முறை அதை விட மேலாக தனது லெக் சுழல்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் மூலம் சிறந்த திறமைகளை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இடது கை துடுப்பாட்ட வீரர் கெவின் தருஷ, மாரிஸ் ஸ்டெல்லா அணியின் இதயத்தை போன்றவர். கடந்த பருவ கால போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி, 12 போட்டிகளில் 586 ஓட்டங்களை விளாசினார். அதே போன்று இம்முறையும் அவர் அதிகமான ஓட்டங்களை குவிக்க எதிர்பார்த்துள்ளார்.
கந்தானை டி மெசனொட் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த லசித் க்ரூஸ்புள்ளே இம்முறை மாரிஸ் ஸ்டெல்லா அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட உள்ளார். டி மெசனொட் கல்லூரிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த முக்கிய வீரரான இவர், இம்முறை தனது முழுமையான பங்களிப்புக்களை மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு வழங்குவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான திமிது ப்ரீத்ம கடந்த பருவ கால போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 248 ஓட்டங்களையும் விளாசி அசத்தியிருந்தார். மாரிஸ் ஸ்டெல்லா அணியின் வெற்றிக்கு அதிக அர்ப்பணிப்புடன் விளையாடும் ஒரு முக்கிய வீரராக இவர் உள்ளார்.
முன்றாவது வருடமாகவும் விளையாடும் பசிந்து உஷெட்டி, தனது அணியின் சுழல் பந்து வீச்சுக்கு தலைமை தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இடது கை சுழல் பந்து வீச்சாளரான இவர், கடந்த பருவ கால போட்டிகளில் 36 விக்கெட்டுகளை வீழ்தியதுடன், 336 ஓட்டங்களையும் விளாசி சிறப்பான பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
இந்த பருவ காலத்திற்கான மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி
பயிற்சியாளர்கள்
அரை தசாப்த காலமாக புனித ஜோசப் கல்லூரியின் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சி அளித்த அனில் சந்தன இம்முறை மாரிஸ் ஸ்டெல்லா அணியை தயார்படுத்துகின்றார். ஜோசப் கல்லூரி அணிகளுக்கு பயிற்சியளித்த அனுபவங்கள் மூலம், அவர் மாரிஸ் ஸ்டெல்லா அணியை இம்முறை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லலாம். அவருக்கு உதவியாளராக டிஷான் சமிந்த இருக்கும் அதே நேரத்தில், அணியின் மேலாண்மையாளராக இஷாரா பெர்னாந்து செயல்படுகிறார்.
2016/17 பருவ கால போட்டிகளில் மாரிஸ் ஸ்டெல்லா கிரிக்கெட் அணி பலவீனமான ஆரம்பத்தை பெற்றிருந்தாலும், தங்களுடைய கன்னி சம்பியன் பட்டத்தை பெறும் கனவை நனவாக்க வேண்டுமாயின் கடினமாக பயிற்சிகளை செய்து, இதன் பிறகு வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டும்.