திடீர் ஓய்வை அறிவித்தார் அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்

Champions Trophy 2025

17
Marcus Stoinis

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்த ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அறிவித்துள்ளார். 

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 2 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் ஸ்டோய்னிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவுஸ்திரேலியாவைப் போல உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது 

முன்னதாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பெயரிடப்பட்டார். இருப்பினும், ஸ்டோய்னிஸ் தற்போது தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். 

இதன்மூலம் அவர் எதிர்வரும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலும் விளையாடபோவதில்லை என்பதையும் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘அவுஸ்திரேலியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது. மேலும் நான் எனது அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது நான் எப்போதும் போற்றும் ஒன்று. 

இது எளிதான முடிவு அல்ல, ஆனால் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். மேலும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உடன் ஒரு அருமையான உறவு உள்ளது. மேலும் அவர் எனக்கு அளித்த ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்என்று தெரிவித்துள்ளார் 

எவ்வாறாயினும், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் T20 சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறியுள்ளார். அதேபோல, எதிர்வரும் காலங்களில் ஐபிஎல் போன்று உலகம் முழுவதும் நடைபெறும் லீக் தொடர்களில் அதிக கவனம் செலுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார் 

அவுஸ்திரேலிய அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மார்கஸ் ஸ்டோய்னிஸ் இதுவரை 71 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் 6 அரைச் சதங்களுடன் 1495 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 48 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2021 T20 உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் ஸ்டோய்னிஸ் பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இம்முறை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் விலகிய நிலையில், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். இந்த நிலையில், தற்போது அணியின் முன்னணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இத்தொடருக்கு முன்னரே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 

35 வயதான இவர், தற்போது தென்னாப்பிரிக்காவில்  நடைபெற்று வரும் SA20 போட்டியில் சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<