புதிய பருவகாலத்திற்கான அனைத்து கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தின் முதல் மூன்று தலைவர்களும் கடந்த ஒருமாத காலத்திற்குள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி, பல போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுமுள்ளன. இந்நிகழ்வால் அவ்வணியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இப்பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டி முதல் பிரீமியர் லீக் வரையிலான அனைத்து சுற்றுப்போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்றுவருகின்றது. போட்டி முடிவுகள் தமது அணிக்கு சாதகமாக அமையாத நிலையில் வீரர்கள் முதற்கொண்டு, ஆதரவாளர்களும் அதிருப்தி அடைவதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு நடுவர்களின் முடிவுகளே காரணிகளாக அமைகின்றன.
ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப்போட்டியில் விளையாடிவரும் றியல் மட்றிட் கால்பந்து கழகம் இப்பருவகாலத்தின் முதற்கட்ட போட்டிகளில் பின்னடைவை அடைந்துள்ளதை லாலிகா சுற்றுப்போட்டியின் புள்ளிப்பட்டியல் எடுத்துக்காட்டுகிறது. கடந்த பருவகாலத்திற்கான லாலிகா சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிய ரியல் மெட்ரிட் அணி, தற்போது நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் பின்னர் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திலுள்ளது.
அத்துடன் இப்பருவகாலத்திற்கான சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் ரியல் மெட்ரிட் அணியின் முக்கிய வீரர்கள் பலர் போட்டி விதிமுறைகளை மீறி விளையாடிய குற்றத்திற்காக போட்டியின் இடைநடுவே சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுகளால் அவ்வணியின் ரசிகர்கள் அதிருப்தியிலுள்ளனர்.
கடந்த ஒருமாத காலத்திற்குள் ரியல் மெட்ரிட் கழகத்தின் முதல் மூன்று தலைவர்களுமே இவ்வாறு சிவப்பு அட்டை காட்டப்பட்டவர்களாவர். பார்சிலோனா கழகத்துடன் நடைபெற்ற ஸ்பெய்னின் சூப்பர் கிண்ணத்திற்கான இறுதியாட்டத்தின் முதற்கட்ட போட்டியில், ரியல் மெட்ரிட் கழகத்தின் தற்போதைய மூன்றாவது தலைவரான கிறிஸ்டியானோ ரோனால்டோ போட்டியின் 82ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இவர் போட்டியின் 80ஆவது நிமிடத்தில் தான் பெற்ற கோலின்போது தனது மேலாடையை (T-Shirt) கழற்றியதற்காக ஒரு மஞ்சள் அட்டையும், போட்டியின் 82ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் பெனால்டி எல்லையில் டைவ் (Dive) பண்ணிய குற்றத்திற்கு இரண்டாவது மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டு பின்னர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இரண்டாவது சிவப்பு அட்டையின் போது நடுவரை தள்ளிய குற்றத்தையும் இணைத்து இவருக்கு 5 போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரியல் மெட்ரிட் கழகம் டிபோர்டிவோ கழகத்துடன் மோதிய தனது முதல் லாலிகா போட்டியில் றியல் மட்றிட் கழகத்தின் முதல் தலைவரும், சிறந்த பின்கள வீரருமான ஸர்ஜீயோ ராமோஸிற்கு போட்டியின் 92ஆவது நிமிடத்தில் இரண்டு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அத்துடன் இவருக்கு ஒரு லாலிகா போட்டித் தடையும் விதிக்கப்பட்டது.
இதில் முக்கிய விடயம் யாதெனில் இவர்கள் இருவருடைய சிவப்பு அட்டை சம்பந்தமாகவும் ரியல் மெட்ரிட் கழகம் மேன்முறையீடு செய்த போதும், தண்டனைகள் எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை.
லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா
கடந்த வாரம் நடைபெற்ற லாலிகா சுற்றுப் போட்டியில் லெவன்டே மற்றும் றியல் மட்றிட் கழகங்கள் மோதின. இப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி தனது சிறப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறியது. இப்போட்டியில் றியல் மட்றிட் அணியின் இரண்டாம் தலைவர் மார்சலோவிற்கு போட்டியின் 88ஆவது நிமிடத்தில் நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
போட்டியின் 88ஆவது நிமிடத்தில் மார்சலோ கோலை நோக்கி வேகமாக அடித்த பந்தை, லெவன்டே (Levante) கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்ததன் பின்னர், லெவன்டே பின்கள வீரர் பெட்ரோ லோபெஸ் (Pedro Lopez) உடன் நிலை தடுமாறி மோதிய போது அவரை வேண்டுமேன்றே காலால் உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு மார்சலோவிற்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. ரியல் மெட்ரிட் கழக தற்போதைய பயிற்றுவிப்பாளர் ஸினடினின் ஸிடேன் (Zinedine Zidane) இது பற்றி பின்வருமாறு தெரிவித்துள்ளார். ”நான் எதுவும் கூறப்போவதில்லை. அவர் (நடுவர்) அவருடைய கடமையை செய்துள்ளார்.”
மேலும் ரியல் மெட்ரிட் கழகத்தின் நட்சத்திர வீரரும், மார்சலோவின் சிறந்த நண்பராகவும் கருதப்படும் ரொனால்டோ இந்நிகழ்வு சம்பந்தமாக பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். ”மார்சலோ சிறந்த ஒரு கால்பந்து வீரர். அவர் எதிரணி வீரர்களை மதிப்பவராகவும் உள்ளார். அவர் வேண்டுமென்றே அவ்வாறு உதைந்து இருக்க மாட்டார்.” இவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள அதேவேளை நேற்றைய தினம் (11) மார்சலோவிற்கு நான்கு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிகழ்வுகளை இனிவரும் காலங்களில் ரியல் மெட்ரிட் கழகம் எவ்வாறு எதிர் கொள்ளும் என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.