44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சம்பியனானது மேல் மாகாணம்

298

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான 44 ஆவது தேசிய விளையாட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (14) நிறைவுக்கு வந்தது.

தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் எந்தவொரு தேசிய சாதனையும் முறியடிக்கப்படாத நிலையில், ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த சரித் கப்புகொட்டுவ, (50.86 மீற்றர்) புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

தேசிய விளையாட்டு விழா இரண்டாம் நாளில் புவிதரனுக்கு வெள்ளிப் பதக்கம்

இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை தென் மாகாணத்தைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் (2.21 மீற்றர்) மஞ்சுள குமார பெற்றுக்கொண்டதுடன், வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முப்பாய்ச்சல் வீராங்கனை (13.26 மீற்றர்) ஹசினி பிரபோதா பெற்றுக்கொண்டார்.

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற மேல் மாகாணம், இன்று நிறைவுக்கு வந்த 44 ஆவது விளையாட்டு விழாவிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் 101 தங்கம், 826 வெள்ளி மற்றும் 76 வெண்கலப் பதக்கங்களை வென்று மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 46 தங்கம், 41 வெள்ளி,  53 வெண்கலப் பதக்கங்களை வென்ற மத்திய மாகாணம் 2 ஆவது இடத்தையும், 31 தங்கம், 34 வெள்ளி மற்றும் 44 வெண்கலப் பதக்கங்களை வென்ற தென் மாகாணம் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8 ஆவது இடத்தையும், 2 தங்கம், 7 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களை வென்ற வட மாகாணம் 9 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

கிழக்கு மாகாணத்துக்கு 7 பதக்கங்கள்

இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தது. இதில் கிழக்கு மாகாண அணி ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை ஈட்டிவருகின்ற பொத்துவிலைச் சேர்ந்த அஷ்ரப், நிந்தவூரைச் சேர்ந்த ஆஷிக், அட்டாளச்சேனையைச் சேர்ந்த மிப்ரான் ஆகியோர் தாம் பங்குபற்றிய போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்திருந்த அதேநேரம், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் கிழக்கு மாகாண அணி 2 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன் தங்கப் பதக்கம் வென்று கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். போட்டியை நிறைவுசெய்ய 48.12 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனான அருண தர்ஷன, அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்ததுடன், இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இளையோர் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை உறுதி செய்த இளம் வீராங்கனை பாரமி வசந்தி

இதேவேளை, குழுநிலைப் போட்டிகளில் கிழக்கு மாகாண அணி, பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் சம்பியன் பட்டத்தை வென்றது. இதில் ஆண்களுக்கான கூடைப்பந்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி, ஆகியவற்றில் 2 ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணம்,  ஆண்களுக்கான கிரிக்கெட்டில் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

வடக்கிற்கு 2 பதக்கங்கள்

கோலூன்றிப் பாய்தலில் தமது ஆதிக்கத்தை அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற வட மாகாண வீரர்களுக்கு இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்தளவு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

அதிலும் குறிப்பாக 100 இற்கும் குறைவான மெய்வல்லுனர் வீரர்களுடன் களமிறங்கிய வட மாகாண அணிக்கு இம்முறை போட்டித் தொடரில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்தது.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சி. ஹெரீனா வெண்கலப் பதக்கத்தையும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் வெள்ளிப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.

இதேவேளை, கடந்த தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், குழுநிலைப் போட்டிகளில் ஆண்களுக்கான கபடி, பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளில் வட மாகாண அணி 3 ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் 45ஆவது தேசிய விளையாட்டு விழா

தேசிய விளையாட்டு விழாவின் 45 ஆவது அத்தியாயம் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் என இன்று நிறைவுக்கு வந்த தேசிய விளையாட்டு விழாவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இறுதியாக 1976 ஆம் ஆண்டு திருகோணமலையில் தேசிய விளையாட்டு விழா நடைபெற்றிருந்ததுடன், சுமார் 42 வருடங்களுக்குப் பிறகு கிழக்கு மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் நடைபெற்ற 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், வெற்றிபெற்ற வீரர்களுக்கான விருதுகளும், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

அத்துடன், 25 வருட சேவையை நிறைவுசெய்த விளையாட்டுத்துறை அதிகாரிகளை பாராட்டி ஜனாதிபதியால் தங்க விருதுகளும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<