இலங்கையில் இயங்கி வரும் மன்செஸ்டர் கால்பந்து அகடமி இந்தியாவில் நடைபெறவுள்ள கால்பந்து தொடரில் பங்கெடுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதன் மூலம் சர்வதேச அரங்கில் கால்பதிக்கின்றது.
>> ஒலிம்பிக், AFC தகுதிகாண் கால்பந்து தொடர் வாய்ப்பை இழக்கும் இலங்கை
அந்தவகையில் மன்செஸ்டர் அகடமியின் 12, 14 மற்றும் 16 வயதின் கீழ்ப்பட்ட வயதுப் பிரிவு அணிகள் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 01ஆம் திகதி இந்தியாவில் கால்பந்து போட்டிகளில் ஆடுகின்றன. மூன்று வயதுப் பிரிவு அணிகளும் மொத்தமாக 18 போட்டிகளில் ஆடவிருக்கின்றதோடு, ஸ்கீன்பீல்ட் விளையாட்டு அகடமி (Skinfield Sports Academy) மற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் கால்பந்து சம்மேளனம் (Karnataka State Football Association) ஆகியவற்றுடனும் இணைந்து பணிபுரியவிருக்கின்றன.
இதேநேரம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கான அணிக் குழாம்களும் தலா 20 பேர் வீதம் கொண்டிருப்பதோடு, இந்த அணிக் குழாம்களும் ரமழான் மாதம் அடங்கலாக கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன. இந்த குழாம்கள் ஜோர்ஜ் அகஸ்டின், தேவசகாயம் ராஜமணி, அன்டன் வோம்பேக், S. அந்தோணி, மொஹமட் அஸ்வர், மொஹமட் சியாம் மற்றும் S. சிறிகாந்த் ஆகிய பயிற்சியாளர்களின் ஆளுகையில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்செஸ்டர் அகடமி குறித்து ThePapare.com இடம் கருத்து வெளியிட்ட அதன் தலைமை அதிகாரிகளில் ஒருவரான ஜோர்ஜ் அகஸ்டின் இந்திய சுற்றுப் பயணம் மூலம் இலங்கைக்கும் பெருமை சேர்க்க எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டிருப்பதோடு, இந்த சுற்றுப் பயணத்தினை சாத்தியமாக்க உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருப்பதாக கூறியிருக்கின்றார்.
>> வாக்குரிமை கோரும் இலங்கையின் முன்னணி கால்பந்து கழகங்கள்
இதேவேளை மன்செஸ்டர் அகடமியின் 12 வயதின் கீழ்ப்பட்ட அணி ஸெய்ன் இல்யாஸ் மூலமும், 14 வயதின் கீழ்ப்பட்ட அணி தாஸின் அஹ்மட் மூலமும், 16 வயதின் கீழ்ப்பட்ட அணி மொஹமட் சிமார் மூலமும் வழிநடாத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<