ஐரோப்பிய கழகமட்ட போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தடை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேன்முறையீடு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் அனுசரணையாளர் பங்களிப்புகளை பங்கு நிதிகளாக காண்பித்ததான குற்றச்சாட்டில் இருந்து மன்செஸ்டர் சிட்டி விடுவிக்கப்பட்டது.
ஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடை
சிட்டி அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நியாயமான முறையில் நிதியை கையாளும் விதியை மோசமாக மீறியிருப்பதாகக் கூறி ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியமான UEFA கடந்த பெப்ரவரி மாதம் தடை விதித்தது.
இந்நிலையில் சிட்டி அணி மீதான அபராதமும் 30 மில்லியன் யூரோக்களில் இருந்து 10 மில்லியன் யூரோக்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பில் நேற்றுத் தீர்ப்பு அளித்த நீதிமன்றம், “சிட்டி அணி UEFA நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியபோதும், UEFA வின் கழக நிதி கட்டுப்பாட்டு சபை அவர்கள் மீது விதித்த தடை ரத்துச் செய்யப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் முன்வைத்த ஆதாரங்கள் மற்றும் கழகத்தின் நிலைப்பாடு வெற்றி அளித்திருப்பதாக இந்தத் தீர்ப்புக் குறித்து சிட்டி அணி குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளப்படுவதாக UEFA வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் ப்ரீமியர் லீக்கில் இரண்டாவது இடத்தை உறுதி செய்திருக்கும் சிட்டி அணிக்கு 2020-21 பருவத்திற்கான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட முடியுமாகியுள்ளது.
உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கலகெதர விடுவிப்பு
இந்தப் பருவத்திற்கான சம்பியன்ஸ் லீக்கில் வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி மன்செஸ்டர் சிட்டி அணி எட்டிஹாட் அரங்கில் கடைசி 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட்டை எதிர்கொள்ளவுள்ளது. முதல் கட்டப் போட்டியில் சிட்டி 2-1 என முன்னிலையில் இருக்கும் நிலையில் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டால் ஜுவன்டஸ் அல்லது லியோன் கழகத்தை எதிர்கொள்ளும்.
உரிமையாளர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களுடன் அதிகபடியான அனுசரணை உடன்படிக்கைகள் மூலம் கழகங்கள் வரம்பற்ற பணத்தை ஈட்டுவதை தடுக்கும் வகையிலேயே UEFA இன் நிதி ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய லீக்குகளில் அதிகரித்து வரும் செல்வந்தக் கழகங்கள் மற்றும் வறிய கழகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை மட்டுப்படுத்துவதற்கும் அதிகரித்து வரும் கடன் பிரச்சினையை சமாளிப்பதற்கும் UEFA முயன்று வருகிறது.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க