தொடர்ச்சியாக இரண்டாவது முறை பிரீமியர் லீக் சம்பியனாகிய மன்செஸ்டர் சிட்டி

208
City crowned as the Premier League Champions
PSG Twitter

2021/22 பிரீமியர் லீக் தொடரின் சம்பியனாக மன்செஸ்டர் சிட்டி அணி நேற்று (22) தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக முடிசூடியது.

இந்த பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் சம்பியன்கள் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டிகள் இறுதி வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. இறுதி வாரத்தின் அனைத்து போட்டிகளும் இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகின.

இப்போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியனாவதற்கு அஸ்டன் விலா அணிக்கு எதிராக ஒரு வெற்றி அல்லது சமநிலை முடிவு தேவைப்பட்டது. மறுமுனையில் லிவர்பூல் அணி சம்பியனாவதற்க்கு வுல்வ்ஸ் அணிக்கு எதிராக அவர்களது வெற்றியும் மன்செஸ்டர் சிட்டி அணியினது தோல்வியும் அவர்களுக்கு தேவைப்பட்டது. இந்த நிலையிலேயே இறுதி வாரப் போட்டிகள் ஆரம்பமாகின.

>> இலங்கையின் கால்பந்து முன்னேற்றத்திற்கு கட்டாரின் புதிய திட்டம்

இப்போட்டிகளில் 70 ஆவது நிமிடம் வரை லிவர்பூல் அணி 1 இற்கு 1 எனவும், மன்செஸ்டர் சிட்டி அணி 2 இற்கு 0 என அஸ்டன் விலாவிற்கு எதிராக பின்னிலையிலும் இருந்தது. இந்த நிலையில் இவ்விரு போட்டிகளை பார்வையிட்ட அனைவரும் லிவர்பூல் அணியே சம்பியனாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நினைத்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 76 ஆவது நிமிடத்தில் இருந்து 81 ஆவது நிமிடம் வரை 5 நிமிடங்களுக்குள் மன்செஸ்டர் சிட்டி அணி 3 கோல்களை அடித்து அஸ்டன் விலா அணியை 3 இற்கு 2 என வீழ்த்தி, இப்பருவகால பிரீமியர் லீக் சம்பியனாக முடிசூடியது. மறுமுனையில் லிவர்பூல் அணி வுல்வ்ஸ் அணிக்கு எதிராக 3 இற்கு 1 என வெற்றி பெற்ற போதிலும் அவர்களால் ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில் மன்செஸ்டர் சிட்டியை விட ஒரு புள்ளி பின்னிலையிலேயே இருக்க முடிந்தது. இந்தப் போட்டியில் மன்செஸ்டர் சிட்டி அடித்த மூன்று கோல்களில் 2 கோல்கள், மாற்று வீரர் குண்டொகனால் அடிக்கப்பட்டமை மேலும் ஒரு சிறப்பம்சமாகும். மன்செஸ்டர் சிட்டி அணியின் மற்றைய கோல் ரோட்ரியால் பெனால்டி பெட்டிக்கு வெளியே வைத்து அடிக்கப்பட்டது.

>> இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியுள்ள மன்செஸ்டர் சிட்டி அணி, வரலாற்றில் தனது 6 ஆவது பிரீமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்த 6 கிண்ணங்களில், மன்செஸ்டர் சிட்டி 4 கிண்ணங்களை பெப் குவார்ட்டியோலாவின் முகாமைத்துவத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் வென்றுள்ளது.

அத்துடன் பிரீமியர் லீக் வரலாற்றில் கடந்த 30 வருடங்களில் அதிக கிண்ணங்கள் வென்ற அணியாக செல்சியை பின்தள்ளி 3 ஆவது இடத்திற்கு முன்னேறியது மன்செஸ்டர் சிட்டி.

இப்போட்டியின் இறுதி விசில் அடித்தவுடன் அவ்வணியின் முகாமையாளரான பெப் குவார்ட்டியோலாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தமை போட்டியை பார்த்த அனைவராலும் காணக்கூடியதாக இருந்தது.

>> WATCH – மீண்டும் சூடுபிடித்துள்ள PREMIER LEAGUE | FOOTBALL ULAGAM

ஐரோப்பாவின் மிகப்பெரும் லீக்குகளில் ஒன்றான பிரீமியர் லீக் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த பருவக்காலத்திற்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. அந்தவகையில் பின்வரும் விருதுகள் சிறப்பாக பிரகாசித்த வீரர்களுக்கு வழங்கப்பட்டன.

  • அதிக கோலடித்த வீரருக்கான தங்க பந்து விருது – மொஹமட் சலாஹ் (லிவர்பூல்) மற்றும் ஹங் மின் சன் (டோட்டேன்ஹம்) – 23 கோல்கள்
  • அதிக கோலுக்கான பந்துப்பரிமாற்றங்களை வழங்கிய வீரர் – மொஹமட் சலாஹ் (லிவர்பூல்) – 13 பந்து பரிமாற்றங்கள்
  • சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறை விருது – அலிசன் (லிவர்பூல்) மற்றும் எடர்சன் (மன்செஸ்டர் சிட்டி)

>> மேலும் பல கால்பந்து செய்திகளுக்கு <<