நான்கு ஆண்டுகள் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து நிதி தொடர்பான 100க்கும் அதிகமான விதிகளை மீறியதாக மன்செஸ்டர் சிட்டி கழகம் மீது பிரீமியர் லீக் நிர்வாகத்தினால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009 தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இந்த விதி மீறல்கள் தொடர்பில் அந்தக் கழகம் மீதான விசாரணைக்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைக்க பரிந்தரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் சிட்டி கழகம் அந்த விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு பற்றி அதிர்ச்சி அடைவதாக மன்சஸ்டர் சிட்டி குறிப்பிட்டுள்ளது.
றினோன் தலைவர் கிண்ண அரையிறுதியில் யாழ் மத்தி, ஸாஹிரா
இந்நிலையில் ஆணைக்குழுவினால் மன்செஸ்டர் சிட்டி கழகத்தின் மீது அபராதம் விதிப்பது, புள்ளிகள் குறைப்பது தொடக்கம் பிரீமியர் லீக்கில் இருந்து நீக்குவது வரை தண்டனைகளை விதிக்க முடியும்.
“பிரீமியர் லீக் விதிகளை மீறியதாக, குறிப்பாக பிரீமியர் லீக் வழங்கி இருக்கும் பெரும் அளவு விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் தரப்பட்டிருக்கும் விரிவான விபரங்கள் அடங்கிய இந்தக் குற்றச்சாட்டுகள் மன்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி தருகிறது’ என்று அந்தக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கும் மறுக்க முடியாத ஆதாரங்களின் விரிவான தொகுதியை பாரபட்சமின்றி பரிசீலிக்க, ஒரு சுயாதீன ஆணைக்குழு இந்த விடயத்தை மறுஆய்வு செய்வதை கழகம் வரவேற்கிறது’ என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
மன்செஸ்டர் சிட்டி 2008ஆம் ஆண்டு அபூதாபி யுனைடட் குழுமத்தினால் வாங்கப்பட்டது தொடக்கம் கடந்த பருவத்தில் ஆறாவது முறையாக பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது.
குற்றச்சாட்டுகள் என்ன?
பிரீமியர் லீக் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘கழகத்தின் நிதிய நிலையின் உண்மையான மற்றும் நியாயமான பார்வையை தரும் துல்லியமான நிதி விபரத்தை வழங்குவதற்கு தேவையான விதிகளை சிட்டி மீறியுள்ளது.’
FIFAவின் இலங்கை மீதான தடையை நீக்க என்ன செய்ய வேண்டும்?
இதில் அனுசரணை மூலமான வருமானம் மற்றும் செயற்பாட்டு செலவுகள் உட்பட கழகத்தின் வருவாயை உள்ளடக்கும் விபரங்கள் அடங்கும்.
மேலும் ரொபார்டோ மன்சினி கழத்திற்கு பொறுப்பாக இருந்த 2009-10 தொடக்கம் 2012-13 வரையான பருவங்களில் முகாமையாளரின் ஊதியம் மற்றும் 2010-11 மற்றும் 2015-16க்கு இடைப்பட்ட பருவத்தில் வீரர்கள் ஊதியத்தின் முழு விபரங்கள் தொடர்பிலான விதிகளையும் அந்தக் கழகம் மீறி இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2013-14 தொடக்கம் 2017-18 வரையில் வீரர்களின் நிதி அடிப்படையிலான நியாயமான விளையாட்டு, அதேபோன்று 2015-16 தொடக்கம் 2017-18 வரையில் இலாபம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பிரீமியர் லீக் விதிகள் உட்பட Uefa தொடர்பிலான விதிகளை சிட்டி மீறி இருப்பதாகவும் பிரீமியர் லீக் குறிப்பிட்டுள்ளது.
சிட்டி கழகம் 2012 மற்றும் 2016க்கு இடையே நிதி அடிப்படையிலான நியாயமான விளையாட்டு ஒழுங்குமுறைகளை மோசமாக மீறியதாக 2020 இல் ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பான Uefa தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ஆடுவதற்கு சிட்டி மீது வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு தடை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தினால் அந்த ஆண்டு இறுதியில் நீக்கப்பட்டது.
சிட்டி கழகம் அனுசரணை ஒப்பந்தம் ஒன்றின் மதிப்பை உயர்த்தியது தொடர்பில் கசிந்த ஆவணத்தை 2018 நவம்பரில் ஜெர்மனிய பத்திரிகையான டெர் ஸ்பிகல் வெளியிட்டதை அடுத்தே அந்தக் கழகம் மீது Uefa விசாரணையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமது கழகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் முற்றாக தவறானது என்றும் ஜெர்மனிய பத்திரிகையின் குற்றச்சாட்டுகள் சட்டவிரோத ஊடுருவல் என்றும் பின்புலம் அற்றவை என்றும் பிரீமியர் லீக் விசாரணை ஆரம்பிக்கப்பட்டபோது மன்செஸ்டர் சிட்டி குறிப்பிட்டது.
அபூதாபி யுனைடட் குழுமத்தினால் வங்கப்பட்ட பின்னர் உலகின் மிகச் சிறந்த வீரர்களை வாங்கிய மன்செஸ்டர் யுனைடட் பலம்மிக்க அணியாக மாறியமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<