தலைமை கிடைக்காவிட்டால் உலகக் கிண்ணத்திற்கு முன் ஓய்வுபெற தயாராகும் மாலிங்க

3064

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கி அதனை வேறு ஒருவருக்கு வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்தால், உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் தாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் தொடக்கம் இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக லசித் மாலிங்க செயற்பட்டபோதும், மாலிங்கவின் தலைமையின் கீழ் விளையாட முடியாது என திசர பெரேரா உட்பட வீரர்கள் பலரும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் முறையிட்டிருப்பதுடன் உலகக் கிண்ணப் போட்டியில் தலைமையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் தேர்வுக் குழு அவதானம் செலுத்தியுள்ளது.  

உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

எவ்வாறாயினும் அது தொடர்பில் இறுதி முடிவு தற்போது முடிவுற்றிருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடருக்கு பின்னர் எடுக்கப்படவிருப்பதோடு, தலைமை தொடர்பில் மாலிங்க வேறு நிலைப்பாட்டில் உள்ளார். தமக்கு நெருக்கமானவர் ஒருவருடன் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் மாலிங்க, தலைமைக்கு பொருத்தம் இல்லை என்றால் உலகக் கிண்ணத்திற்கும் தான் தகுதியற்றவர் என்பதால் தொடர்ந்தும் விளையாடுவது அர்த்தம் இல்லை என்பதுவே மாலிங்கவின் கருத்தாக உள்ளது.  

உலகக் கிண்ண போட்டிக்காக இலங்கை அணியை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட மாகாண மட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இரண்டு தடவைகள் மாலிங்க இந்தியாவுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு வந்த மாலிங்க வியாழக்கிழமை (11) முடிவுற்ற அந்த மாகாண மட்ட தொடரில் இணை சம்பியன் வரை காலி அணியை வழிநடத்தினார்.     

மிக நம்பிக்கைக்குரிய தரப்பு மூலம் இது பற்றிய தகவல்கள் ThePapare.com இற்கு தெரியவந்திருப்பதோடு, அதில் மாலிங்க மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, தம்மை தவிர தலைமைக்கு தகுதியான எவரும் அணியில் இல்லை என்பதாகும். இதில் தலைமைப் பொறுப்புக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பெயர்களை ஒருவர் பின் ஒருவராக விபரித்திருக்கும் மாலிங்க, மெதிவ்ஸ் என்பவர் காயத்துடன் அணிக்காக விளையாடும் வீரர் என்றும், திமுத் என்பவர் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஒருநாள் போட்டிகளில் அனுபவம் இல்லாத வீரர் என்றும், தினேஷ் சந்திமால் என்பவர் அணியில் இடமோ அல்லது நம்பிக்கையோ அற்ற வீரர் என்றும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.     

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கிண்ண போட்டியில் அணித் தலைவராக மாலிங்க செயற்பட்டபோது அந்த உலகக் கிண்ணத்தை வெல்ல இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதும், நியூசிலாந்து சுற்றுப்பயணம் தொடக்கம் மாலிங்க தலைமை வகித்த ஒரு போட்டியிலாவது வெற்றி பெறுவதற்கு இலங்கை அணியால் முடியாமல்போயுள்ளது.

உபாதைக்கு முகம்கொடுத்ததன் பின் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அணிக்கு திரும்பிய மாலிங்க இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுளை வீழ்த்த முடிந்துள்ளது. ஓவர் ஒன்றுக்கு 5.84 ஓட்டங்கள் வரை விட்டுக் கொடுத்திருக்கும் மாலிங்கவின் விக்கெட் வீழ்த்தும் சராசரி 29.20 ஆக பதிவாகியுள்ளது.    

மெதிவ்ஸின் சதத்தோடு தம்புள்ளை அணிக்கு மாகாண ஒருநாள் தொடரில் மூன்றாம் இடம்

எவ்வாறாயினும் அணித் தலைமையை வழங்குவது தொடர்பில் தெரிவுக் குழு தலைவர் ஹசந்த டி மெல் இடம் ThePapare.com கேட்டபோது, “நாம் யாருக்கும் தலைமை பொறுப்பை தருவதாக வாக்குறுதி அளித்ததில்லை. தென்னாபிரிக்க தொடருக்கு தலைமை பொறுப்பை வகிக்க மாத்திரமே மாலிங்கவுக்கு வழங்கப்பட்டது. யாருக்கும் எம்மால் வாக்குறுதி அளிக்க முடியாது. முதலில் அணியை தேர்வு செய்து அதற்குப் பின்னர் தான் தலைவர் யார் என்பதை பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.      

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க