இலங்கை T20 அணித் தலைவராகச் செயற்பட்டு வந்த நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இந்தியாவில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்
மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து காொணொளி ஊடாக பேசியபோதே மிக்கி ஆர்த்தர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் மாலிங்கவுக்கு பரந்த அறிவும், அனுபவமும் உள்ளது. அந்த அறிவாற்றலை இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் மாலிங்க பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதை பார்க்க விரும்புகின்றேன்.
இது குறித்து அவருடன் கலந்துரையாடினேன். எனவே, இவ்வருடம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆசோகராக உள்வாங்கப்படலாம்” என மிக்கி ஆர்த்தர் தெரிவித்தார்.
இதனிடையே, மாலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய அவர், “மாலிங்க அருமையான கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டுள்ளார் என எண்ணுகின்றேன். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த வருடம் இரத்துச் செய்யப்பட்டதால் அது அவரை விட்டு தொலைவில் சென்றுவிட்டதாக நான் கருதுகின்றேன். ஆனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை மகத்தானது” என தெரிவித்தார்.
கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20 போட்டியில் இறுதியாக விளையாடிய 37 வயதான லசித் மாலிங்க, கடந்த மாதம் Franchises (உரிமைத்துவ) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளபோதிலும், சர்வதேச T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
Video – Lasith Malinga வின் திடீர் ஓய்வு: மும்பை இந்தியன்ஸுடன் மனக் கசப்பா?
இதுஇவ்வாறிருக்க, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2004இல் அறிமுகமான லசித் மாலிங்க, 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளையும், 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 338 விக்கெட்டுகளையும், 84 சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் 107 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஹெட்ரிக் சாதனைகளையும், T20 கிரிக்கெட் போட்டிகளில் 2 ஹெட்ரிக் சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
அதுமாத்திரமின்றி, சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை எடுத்த உலகின் முதலாவது பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகவும் உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<