இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தற்காலிகமாக தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார்.
[rev_slider LOLC]
அதேநேரம், 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரையான இலங்கை அணியின் எதிர்கால திட்டங்களில் மாலிங்க ஒரு பகுதியாக இருப்பார் என ஹத்துருசிங்க உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபற்றும் சுதந்திரக் கிண்ணத் முத்தரப்பு டி20 தொடர் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை அணியின் வியூகம் குறித்த சந்திமாலின் கருத்து
இந்நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை வீரர்களுக்காக நேற்று (05) நடைபெற்ற இறுதிக்கட்ட பயிற்சிகளின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சந்திக்க ஹத்துருசிங்க கலந்துகொண்டார்.
இதில், அண்மைக்காலமாக இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுவரும் லசித் மாலிங்கவை ஏன் சுதந்திர கிண்ண டி20 தொடரில் இணைத்துக் கொள்ளவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சந்திக்க ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில்,
”மாலிங்க இலங்கைக்கு மாத்திரமல்ல, முழு உலகிற்கும் கிரிக்கெட் விளையாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குகிறார். அவர் ஒரு அற்புதமான வீரர் மாத்திரமல்லாது அவர் உலகின் பிரபல கூடைப்பந்து நட்சத்திரமான மைக்கல் ஜோர்டனைப் போன்று இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றியவர்.
உண்மையில் தற்போது நடைபெற்றுவருகின்ற உள்ளுர் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்ற மாலிங்க, திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். மாலிங்க தொடர்பில் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமில்லை. எனினும், நிச்சயம் மாலிங்கவுக்கு எதிர்வரும் காலங்களில் இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாத்திரம் என்னால் தற்போது கூறமுடியும்” என அவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டையே தனது பந்துவீச்சினால் கட்டிப் போட்டவர் என்றால் மிகையாகாது. எனினும் தொடர் உபாதைகள், போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை, அரசியல் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களால் அண்மைக்காலமாக அவர் இலங்கை அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த வருடம் இந்திய அணிக்கெதிராக இடம்பெற்ற டி20 போட்டிக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் தொடர்களிலும் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாமல் போன மாலிங்கவுக்கு, தற்போது நடைபெற்று வருகின்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடரிற்கான இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இறுதியில் அதுவும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
எனினும், கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றுவருகின்ற உள்ளுர் கழகங்களுக்கிடையிலான டி20 போட்டியில் மாலிங்க மீண்டும் தனது வழமையான திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
சுதந்திர கிண்ண சவால்கள் எவ்வாறு இருக்கும்?
இதில் நேற்று முன்தினம் (04) கோல்ட்ஸ் மற்றும் NCC அணிகளுக்கிடையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் NCC அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்ததுடன், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிகளவு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேநேரம், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து குசல் மெண்டிஸை களமிறக்குவது தொடர்பில் ஹத்துருசிங்கவிடம் வினவியபோது,
”தற்போது குசல் மெண்டிஸின் மனநிலை சிறப்பாக உள்ளது. அணியில் தனது நிலை என்ன என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகின்றார். எங்களது பயிற்றுவிப்பாளர்களும் குசல் மெண்டிஸிடம் நெருக்கமாக சென்று தங்களது பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
குசல் மெண்டிஸ் அணிக்காக என்ன செய்யவேண்டும் என நாம் அவருக்கு தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளோம். அவர் தற்போது அனைத்தையும் உணர்ந்துள்ளார்.
எமது அணியில் தற்போது பல ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். முதல் மூன்று இடங்களுக்கான போட்டித் தன்மை அதிகம். உபுல் தரங்க, குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் சிறப்பான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்.
குசல் மெண்டிஸ் முதல் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அவருடன் யார் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என்பது இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை” என தெரிவித்தார்.
இதேநேரம், இந்திய அணி டி20 தரவரிசையில் முன்னிலை அணியாக உள்ளதால், அவர்களை எதிர்கொண்டு முதல் போட்டியிலிருந்து வெற்றிபெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.