மீண்டும் மும்பை அணியில் லசித் மாலிங்க

1326

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மேஜர் லீக் T20 கிரிக்கெட் (MLC) போட்டியில் இணையும் MI நியூயோர்க் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சுமார் 11 ஆண்டுகள் ஆடிய லசித் மாலிங்க, கடந்த 2020இல் Franchise கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க, IPL அரங்கிற்கும் விடை கொடுத்தார்.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஒருசில முக்கிய தொடர்களில் பணியாற்றிய அவர் தற்போது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 13ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் T20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் MI நியூயோர்க் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மாலிங்கவை நியமிக்க மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

MI நியூயோர்க் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொபின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜே. அருண்குமார் மற்றும் ஜேம்ஸ் பாம்மென்ட் முறையே துடுப்பாட்ட மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் மற்றும் தென்னாபிரிக்காவின் ககிசோ றபாடா ஆகியோர் MI நியூயோர்க் அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல, மேற்கிந்திய தீவுகளின் நிக்கொலஸ் பூரான், அவுஸ்திரேலியாவின் டிம் டேவிட், தென்னாபிரிக்காவின் டெவால்ட் பிரேவ்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோரும் MI நியூயோர்க் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே, MI நியூயோர்க் அணியின் தலைவராக கீரன் பொல்லார்ட் செயல்படவுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<