மாலிங்க கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா?

826
Lasith Malinga

இலங்கை டி20 கிரிக்கட் அணியின் தலைவராக செயற்பட்டுவரும் லசித் மாலிங்க தான் விரைவில் கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று சூசகமாகதெரிவித்துள்ளார்.

நேற்று (25) ஐக்கிய அரபு இராச்சிய அணியுடன் நடந்து முடிந்த ஆசியக்கிண்ண  டி20  போட்டிக்கு பிறகு  செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்கள்  மாலிங்கவிடம்,டி20 உலகக்கிண்ணத்துடன்  ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதா? என்று வினவியுள்ளனர்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மாலிங்க “அதற்கான வாய்ப்பு உள்ளது.  நான் எனது தேசிய அணிக்காக 12 வருடங்களாக விளையாடி வருகிறேன், எனக்குதற்போது 32 வயது ஆகிறது. தற்போது  முழங்காலில் மிக மோசமான காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். இதே போன்ற காயம் 2008ம் ஆண்டிலும்ஏற்பட்டிருந்தது. தற்போது உள்ள நிலையில் நான் ஒன்றரை முதல் இரண்டு  ஆண்டுகள் வரை ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நான் ஓய்வேபெற்று விடலாம்.

நாட்டுக்கு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினால், என்னால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய முடியாது. எனவே, இன்னும்எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் விளையாடுவேன் என்று உறுதியாக கூறமுடியாது. நான் விளையாடப் போகும் இந்த கொஞ்ச காலத்தில் தேசியஅணிக்காவும், என்னுடைய ஐ.பி.எல். அணிக்காவும் சிறப்பாக விளையாட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை அணி கடந்த வருடம் ஜயவர்தன மற்றும் சங்கக்காராவின் ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாமால் தடுமாறிவரும் நிலையில்,மாலிங்கவும் ஓய்வு பெறலாம் என்ற தகவல் அந்நாட்டு ரசிகர்களை மிகவும் கவலையிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.