உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நேற்று (04) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய லசித் மாலிங்க, உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டினார்.
உலகக் கிண்ணத் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் ஆப்கனிஸ்தான் அணியை டக்வத் லூவிஸ் முறைப்படி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடித்து 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அத்துடன், இந்தப் போட்டியில் இரு அணிகளும் பல்வேறு சாதனைகள், மைல்கல்கள் எட்டியிருந்தன.
பவர் ப்ளேயில் அபாரம்
இந்தப் போட்டியின் முதல் 10 ஓவர்களில் (power play) 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு பவர் ப்ளேயில் அதே ஓட்ட எண்ணிக்கையைக் குவித்து அசத்தியது.
இறுதியாக இலங்கை அணி, 2017ஆம் ஆண்டு பங்களாதேஷ் மற்றும் 2018 இல் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் முறையே 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3000 ஓட்டங்கள்
இலங்கை வீரர் லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 6 ஓட்டங்களை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிவேகமாக 3000 ஓட்டங்களைக் குவித்த 3ஆவது வீரர் என்ற புதிய மைல்கல்லை கடந்தார். அவர் 100 இன்னிங்சுகளில், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் உபுல் உபுல் தரங்க 92 இன்னிங்ஸிலும், மார்வன் அட்டபத்து 92 இன்னிங்ஸிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டக் அவுட் சாதனை
இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனார். இது உலகக் கிண்ணப் போட்டிகளில் அஞ்செலோ மெதிவ்ஸின் மூன்றாவது டக் அவுட் ஆகும். மேலும், தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் டக் அவுட் ஆன நான்காவது இலங்கை வீரர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன் மஹேல ஜயவர்தன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகிய வீரர்கள் 3 தடவைகள் இவ்வாறு டக் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தனர்.
சிறந்த பந்துவீச்சு
நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரது விக்கெட்டுக்களை ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி கைப்பற்றியிருந்தார். அத்துடன், இந்தப் போட்டியில் 30 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்ட வீரராகவும் மாறினார்.
இதற்குமுன் 2015 உலகக் கிண்ணத் தொடரில் சபூர் சத்ரான் 38 ஓட்டங்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே முந்தைய சிறந்த பந்துவீச்சாகும்.
இலங்கை அணியின் வெற்றியினை பாராட்டும் கிரிக்கெட் பிரபலங்கள்
ஆப்கானிஸ்தான் அணியினை த்ரில்லரான முறையில்…..
நான்கு விக்கெட்டுகள்
நேற்யை போட்டியில் வேகப் பந்துவீச்சில் மிரட்டி 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய நுவன் பிரதீப், தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், இந்த சாதனையை செய்யும் ஒன்பதாவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார்.
ஐந்தாவது இடம்
சர்வதேச போட்டியில் இலங்கை அணியின் வெற்றியில் சுமார் 687 நாட்களுக்குப் பின் விளையாடிய லசித் மாலிங்க, (2018 செப்டெம்பர் இற்குப் பிறகு) முதல் வெற்றியைப் பெற்றுக் கொண்டார். குறித்த காலப்பகுதியில் இலங்கை அணி எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை.
எனினும், இந்த இடைவெளியில் மாலிங்க இலங்கை அணிக்காக 21 ஒருநாள் மற்றும் 6 டி-20 போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் அந்தக் குறையும் நீங்கியது.
மேலும், மாலிங்க உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அவர் இதுவரை 24 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக 2007 முதல் 2015 வரை மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருந்த மாலிங்க, 22 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
எனினும், நேற்று நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அவர், இந்திய வீரர்களான சஹீர் கான் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
எனவே உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்று தற்போது விளையாடிவரும் ஒரேயொரு வீரரான மாலிங்க, இந்த முறை உலகக் கிண்ணத்தில் தனது அனுபவத்தினால் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக, இம்முறை உலகக் கிண்ணத்தில் குறைந்தபட்சம் 10 அல்லது 15 விக்கெட்டுக்களை மாலிங்க கைப்பற்றினால், வசீம் அக்ரமின் 3ஆவது இடத்தைக் கைப்பற்றுவதற்கான அரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீர்ரகளுக்கான பட்டியலில் கிளென் மெக்ராத் (71), முத்தையா முரளிதரன் (68), வசீம் அக்ரம் (55), சமிந்த வாஸ் (49) ஆகிய வீரர்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<