இம்மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்காக அறிவிப்பட்டுள்ள பாகிஸ்தான் உத்தேச அணியில் இருந்து சொஹைப் மாலிக், சர்பராஸ் அஹமட் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று வீரர்களும் அண்மையில் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து அணியுடனான T20i தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மொஹமட் இர்பானின் உயரத்தை மிஞ்சவுள்ள 21 வயதான முடாசிர்<<
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இன்று (19) அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட உத்தேச குழாத்தில் அப்துல்லாஹ் ஷபீக் அறிமுக வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
20 வயதான ஷபீக், மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறன்றார். அத்துடன், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய T20 கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஏழாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
குறித்த தொடரில் 133 க்கும் அதிகமான சராசரியுடன் 358 ஓட்டங்களை எடுத்தார். மேலும், அவரது T20 அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்தர மற்றும் T20 அறிமுகப் போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதுஇவ்வாறிருக்க, இளம் வீரரான ரொஹைல் நசீர், மொஹமட் ரிஸ்வானுடன் சேர்த்து மேலதிக விக்கெட் காப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
>>பாகிஸ்தானின் தேர்வாளர் பதவியிலிருந்து விலகும் மிஸ்பா<<
ஜிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள பாகிஸ்தான் அணித் தேர்வு குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான மிஸ்பா–உல்–ஹக் கருத்து தெரிவிக்கையில்,
”இந்த உத்தேச அணியில் இடம்பிடித்த வீரர்கள் அனைவரும் அண்மையில் இடம்பெற்ற தேசிய T20 தொடரில் வெளிப்படுத்திய திறமைகளை அடிப்படையாகக் கொண்டுதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
எனவே, இந்தத் தொடருக்காக ஒருசில சிரேஷ்ட வீரர்கள் இடம்பெறாததால் எந்த வகையிலும் அவர்களது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையவில்லை.
குறிப்பாக, துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற மொஹமட் ஹபீஸ் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய இரண்டு அனுபவமிக்க வீரர்கள் தொடர்ந்து அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பயனளிக்கும்” என்று மிஸ்பா உல் ஹக் கூறினார்.
>>Video – விக்கெட்டுக்களின் எண்ணிக்கையில் சாதனை செய்த பந்துவீச்சாளர்கள்<<
இதேநேரம், பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்களை தேர்வு செய்தமை குறித்து மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவிக்கையில்,
”பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்தும், அடுத்தடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாகவும், ரொஹைல் நசீர் ரிஸ்வானின் மேலதிக விக்கெட் காப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மறுபுறத்தில் சர்பராஸுக்கு குவாயிட்–இ–அசாம் கிண்ணத்தில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். இதன்மூலம் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அப்துல்லாஹ் ஷபீக் வெளிப்படுத்திய மகத்தான ஆற்றலுக்கும், செயல்திறனுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் எமது எதிர்கால நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். எனவே அவரது வளர்ச்சியின் ஒரு பகுதியாக அணியில் சேர்க்கப்பட்டார்” என்று மிஸ்பா மேலும் கூறினார்.
>>ஒருநாள், T20 தொடர் அட்டணையில் மாற்றம் செய்த PCB<<
இதன்படி, குறித்த 22 பேர் கொண்ட உத்தேச குழாமானது எதிர்வரும் 21ஆம் திகதி லாகூரில் ஒன்றுகூடவுள்ளனர். அங்கு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஒக்டோபர் 26 ஆம் திகதி ராவல்பிண்டிக்குச் செல்வதற்கு முன்பு கடாபி மைதானத்தில் இரண்டு 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுவார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதனிடையே, மூன்று T20 போட்டிகளுக்காக லாகூருக்குச் செல்வதற்கு முன்பு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடருக்குப் பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உத்தேச குழாம்
அப்துல்லாஹ் ஷபீக், ஆபித் அலி, பாபர் அசாம், பக்கர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் சொஹைல், இப்திகார் அஹமட், இமாம்–உல்–ஹக், குஷ்தில் ஷh, மொஹமட் ஹபீஸ், மொஹமட் ரிஸ்வான், ரொஹைல் நசீர், இமாத் வசீம், சதாப் கான், சபர் கோஹர், பஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவூப், மொஹமட் ஹஸ்னைன், மூசா கான், ஷஹீன் ஷா, வஹாப் ரியாஸ்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<