இறுதி நேர கோலினால் மாலைதீவுகளை சமன் செய்த இலங்கை

Under 20 SAFF Championship

469
SAFF

மாலைதீவுகள் இளையோர் அணிக்கு எதிராக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை இளையோர் அணி இறுதி நேரத்தில் பெற்ற கோலினால் ஆட்டத்தை 1-1 என சமப்படுத்தியது.

எனவே, ஏற்கனவே இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி கண்ட இலங்கை வீரர்கள் தமது இறுதி லீக் மோதலை சமநிலையில் முடித்தவண்ணம் 20 வயதின் கீழ் தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரை நிறைவு செய்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னைய போட்டி முடிவுகள்

இலங்கை 0-1 பங்களாதேஷ்

இலங்கை 0-3 நேபாளம்

இந்தியா 4-0 இலங்கை

மாலைதீவுகள் அணியின் முன்னைய போட்டி முடிவுகள்

நேபாளம் 4-0 மாலைதீவுகள்

மாலைதீவுகள் 1-4 பங்களாதேஷ்

இந்த இரு அணிகளும் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (29) புவனேஷ்வரின் காலிங்க அரங்கில் களம் கண்டிருந்தன. இலங்கைக்கு இது தொடரின் இறுதி லீக் போட்டியாகவும் அமைந்திருந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இலங்கை வீரர்கள் மிகவும் வேகமான ஒரு ஆட்டத்தைக் காண்பித்ததுடன் கோலுக்கான பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், எதிரணியின் தடுப்பாட்டம் காரணமாக கோல்கள் எதுவும் இலங்கைக்கு கிடைக்கவில்லை.

மறுமுனையில் மாலைதீவுகள் வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான அனைத்து வாய்ப்புக்களையும் இலங்கை இளையோர் சிறப்பாக தடுத்தாடினர். எனவே, முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவுற்றது.

தொடர்ந்த இரண்டாம் பாதி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் கோல் திசையில் மாலைதீவுகள் வீரர்கள் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் அவ்வணியின் அய்ஹம் ஹம்தூன் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

தொடர்ந்தும் வேகத்தைக் குறைக்காமல் ஆடிய இலங்கை அணிக்கு போட்டியின் உபாதையீடு நேரத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து இலங்கை அணியின் தலைவர் தேஷான் துஷ்மிக ஹெடர் முறையில் கம்பங்களுக்குள் செலுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.

எனவே, இறுதி நேர கோலினால் ஆட்டத்தை 1-1 என சமப்படுத்திய இலங்கை வீரர்கள், ஆறுதல் முடிவுடன் தொடரை நிறைவு செய்துள்ளனர்.

இலங்கை வீரர்கள் இந்த தொடரில் எதிரணிகளுக்கு மொத்தம் 9 கோல்களை விட்டுக் கொடுத்ததுடன் ஒரே ஒரு கோலையே தமக்காக பெற்றனர். எனினும், இலங்கை இளம் வீரர்களின் ஆட்ட வேகமும், கோலுக்கான முயற்சிகளும் பாராட்டத்தக்க வகையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இலங்கை அணியின் தலைவர் தேஷான் துஷ்மிக இந்த தொடரில் அடையாளம் காணப்பட்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக மாறியிருந்தார்.

முழு நேரம்: மாலைதீவுகள் 1 – 1 இலங்கை  

கோல் பெற்றவர்கள்

  • மாலைதீவுகள் –  அய்ஹம் ஹம்தூன் 74’
  • இலங்கை – தேஷான் துஷ்மிக 90+5’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<