இலங்கை கிரிக்கெட் சபை இலங்கையின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் கழகங்கள் இடையில் ஏற்பாடு செய்திருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், இன்று (5) நிறைவடைந்த போட்டி ஒன்றில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இலங்கை துறைமுக அதிகார சபை அணியினரை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்துள்ளது.
முன்னதாக NCC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணியின் தலைவர் தரங்க பரணவிதான முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு வழங்கினார்.
பொலிஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சில் அசத்திய மொஹமட் சிராஸ்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC)…
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை துறைமுக அதிகார சபை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை குவித்தனர்.
அணியினரின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் தாண்டிய அதீஷ நாணயக்கார 58 ஓட்டங்களையும், ரனேஷ் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தமிழ் யூனியன் அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாந்து மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.
Photos: Tamil Union C & AC vs SL Ports Authority SC | SLC Major Limited Over Tournament 2018/2019
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 210 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் பதிலுக்கு துடுப்பாடியது.
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் ஏற்கனவே பந்துவீச்சில் ஜொலித்த ஜீவன் மெண்டிஸ் மற்றும் சசித்ர சேரசிங்க ஆகியோர் பொறுமையான முறையில் ஆடி வலுவான இணைப்பாட்டம் (154*) ஒன்றினை நான்காம் விக்கெட்டுக்காக உருவாக்கினர்.
இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் போட்டியின் வெற்றி இலக்கினை 35.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களுடன் அடைந்தது.
அறிமுக வீரர் ஓசதவின் துடுப்பாட்டத்தை புகழ்ந்த லசித் மாலிங்க
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல்…
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் வெற்றிக்கு உதவிய இந்த இணைப்பாட்டத்தில், சசித்ர சேரசிங்க 80 ஓட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் 73 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இலங்கை துறைமுக அதிகார சபை அணியின் ஹஷான் விமர்சன 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்திற்கு சற்று நெருக்கடி தந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
இந்த வெற்றியுடன் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 209/9 (50) அதீஷ நாணயக்கார 58, ரனேஷ் பெரேரா 53*, பினுர பெர்னாந்து 19/2, ஜீவன் மெண்டிஸ் 33/2
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 212/3 (35.4) சசித்ர சேரசிங்க 80*, ஜீவன் மெண்டிஸ் 79*, ஹஷான் விமர்சன 50/3
முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<