இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் (AASL) புதிய தலைவராக முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, அவர் தனது கடமைகளை மிக விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், அதன் முன்னாள் தலைவராக இருந்த இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரர் சுகத் திலகரத்ன மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இன்று (30ஆம் திகதி) இடம்பெற்ற குறித்த தேர்தலில் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ 79 வாக்குகளையும், சுகத் திலகரத்ன 32 வாக்குகளையும் பெற்றார்.
இதன்படி, மேலதிக 47 வாக்குகளால் அபார வெற்றி பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ, தனது பதிவியை மிக விரைவில் பெறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் கருத்து தெரிவித்த அவர், ”என்னை இந்தப் பதவிக்கு தெரிவு செய்வதற்காக வாக்களித்த, எனக்கு ஆதரவைத் தந்த அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த வாரத்தில் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் இடம்பெற உள்ளன. எனவே, அதற்காக துரிதமாக செயற்ப வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.
இலங்கையில் மிகவும் திறமையான மெய்வல்லனர் வீர வீராங்கனைகள் உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் செயற்படக் கூடியவர்கள். எனவே அவர்களுக்காக நாம் அதிகம் சேவையாற்ற வேண்டியுள்ளது. எனவே, மிக விரைவில் நான் எனது கடமையை ஆரம்பித்து இலங்கையின் மெய்வல்லுனர் துறையின் வளர்ச்சிக்காக செயற்படுவேன்” எனத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள்
செயலாளர் – பிரேம பின்னவல (போட்டியின்றித் தெரிவு)
துணைத் தலைவர்
லால் சந்திரகுமார, GLS பெரேரா, S.W. நிமல்சிரி, அனில் வீரசிங்க, AHM அக்மல், நயந்தி சந்திரசேன , ஐராங்கனி ரூபசிங்கஉப செயலாளர் – பெர்னான்ட் பெரேரா
பொருளாளர் – சாந்த சில்வா
உதவிப் பொருளாளர் – HA உபாலி