இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக் (MAJOR EMERGING LEAGUE) இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (10) இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சமோத் பியுமால் கடற்படை கழகத்துக்காக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பிரகாசித்திருந்ததுடன், சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சதுர ரந்துனுவும், காலி அணிக்காக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி கயான் சிறிசோமவும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்கவைத்து ஓய்வு பெற்ற ஹேரத்
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்
வெலிசரையில் நேற்று (09) ஆரம்பமான இந்தப் போட்டியில் கடற்படை அணி தமது முதல் இன்னிங்ஸில் 111 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
கடற்படை அணி சார்பில், ரெவான் கெலி (36) மற்றும் மாலிங்க டி சில்வா (30) ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
புளூம்பீல்ட் அணி சார்பாக பந்து வீச்சில் சமோத் பியுமால் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புளூம்பீல்ட் அணியினர், 170 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கசுன் ஏக்கநாயக்க 44 ஒட்டங்களையும், சச்சின் ஜயவர்தன 38 ஓட்டங்களையும், இம்ரான் கான் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் கடற்படை கழகத்துக்காக கவிக டில்ஷான் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
59 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கடற்படை கழகம், 9 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதனையடுத்து 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புளூம்பீல்ட் அணி, 5 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
எவ்வாறாயினும், போட்டியின் முதல் இன்னிங்ஸை புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் வெற்றி கொண்டது.
போட்டியின் சுருக்கம்
கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 111 (31) – ரெவான் கெலி 36, மாலிங்க டி சில்வா 30, சமோத் பியுமால் 5/48, ஷாலுக சில்வா 3/19
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 170 (36.3) – கசுன் ஏக்கநாயக்க 44, சச்சின் ஜயவர்தன 38, இம்ரான் கான் 36, கவிக டில்ஷான் 4/41, மாலிங்க டி சில்வா 2/42
கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 235/9d (51.1) – ஆசிறி டி சில்வா 29, ரெவான் கெலி 36, டிலான் சந்திம 43, சாலித் பெர்னாண்டோ 25, மதுஷான் ரவிச்சந்திரகுமார் 4/86, ஷாலுக்க சில்வா 3/33
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 40/5 (9) – மதுஷான் ரவிச்சந்திரகுமார் 28*, கவிக டில்ஷான் 3/10, அமீன் மிப்லால் 2/14
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது
காலி கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
கொழும்பு ஆர்;. பிரேமதாஸ மைதானத்தில் நிறைவுற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலை அடைந்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய காலி வீரர்கள் 268 ஓட்டங்களை அவர்களின் முதல் இன்னிங்சுக்காக குவித்தனர். இதில், சங்க பண்டார 79 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று தனது தரப்பை பலப்படுத்தியிருந்தார்.
சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சதுர ரந்துனு 88 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
NCC அணிக்காக சதமடித்து அசத்திய 19 வயதான ஹசித போயகொட
பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நிமேஷ் விமுக்தி ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும், யஷோத லங்கா 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் காலி அணிக்காக கயான் சிறிசோம 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.
பின்னர், தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி கிரிக்கெட் அணி, 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில், இரண்டாம் நாளின் ஆட்ட நேரம் முடிவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.
இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற காலி கிரிக்கெட் கழகம் அதற்கான புள்ளிகளை பெற்றுக் கெண்டது.
போட்டியின் சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (73.3) – சானக்க பண்டார 79, அகலங்க கனேகம 45, அஷான் மதுஷங்க 30, அஷேன் வர்ணகுலசூரிய 28, கயான் சிறிசோம 24, சதுர ரந்துனு 6/88
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200 (40.1) – நிமேஷ் விமுக்தி 68*, யஷோத லங்கா 54, கவிந்து இரோஷ் 20, தசுன் செனவிரத்ன 23, கயான் சிறிசோம 5/75, அஷேன் வர்ணகுலசூரிய 2/36, ரஜித ப்ரியன் 2/38
காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 99/5 (30.5) – சானக்க பண்டார 54*, ஹர்ஷ விதான 22, சதுரங்க டில்ஷான் 2/28, இமேஷ் விமுக்தி 2/34
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<