பிரதான கழக போட்டிகளின் பெரும்பாலான ஆட்டங்கள் மழையால் வீண்

Major Club Limited Over Tournament

239

இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரில் சனிக்கிழமை (06) 11 போட்டிகள் நடைபெறவிருந்தபோதும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான ஆட்டங்கள் கைவிடப்பட்டதோடு மேலும் சில ஆட்டங்கள் பாதியிலேயே முடிவுற்றன.

இதில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியில் இராணுவ கிரிக்கெட் கழகம் இலகுவாக வென்றது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட குருநாகல் அணி 77 ஓட்டங்களுக்கே சுருண்டது. அந்த இலக்கை இராணுவ கிரிக்கெட் கழகம் பதினொரு ஓவர்களுக்குள் எட்டியது.

>>இலங்கை A அணியை மீண்டும் மிரட்டிய நஷீம் ஷா

அதுபோன்று விமானப்படை விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் நீர்கொழும்பு அணி 137 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதிலெடுத்தாடிய விமானப்படை அணி 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் மக்கொன சர்ரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதிரெலிய கிரிக்கெட் கழகம் மற்றும் புளும்பீல்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நின்றது. நாணய சுழற்சிக்கு அமைய முதலில் ஆடிய பதுரெலிய கிரிக்கெட் கழகம் 31.5 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் சீரற்ற காலநிலையால் புளும்பீல்ட் அணிக்கு அந்த இலக்கை துரத்த முடியாமல்போனது.

>>மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் விதித்த ICC

கடற்படை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம் 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 85 ஓட்டங்களை பெற்றநிலையில் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அதேபோன்று பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் காலி விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான போட்டியும் பரபரப்பாக நடந்த நிலையில் முடிவு கிடைக்காமல் கைவிடப்பட்டது. பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 25 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் முதலில் ஆடிய பொலிஸ் அணி 141 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம் 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

எனினும் தமிழ் யுனியன் மற்றும் SSC அணிக்கு எதிரான போட்டி உட்பட சனிக்கிழமை நடைபெறவிருந்த ஆறு போட்டிகள் ஒரு பந்துகூட வீசப்படாது கைவிடப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 137/8 (42) – மாதவ வர்ணபுர 35, உபுல் இந்திரசிறி 23, துலஞ்சன மெண்டிஸ் 2/19, அசந்த சிங்கப்புலி 2/22

விமானப்படை விளையாட்டு கழகம் 123 (38.5) – சமீன் கந்தனாரச்சி 23, உபுல் இந்திரசிறி 3/28, மாதவ வர்ணபுர 2/15, உசெட்டியே 2/25

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 11 ஓட்டங்களால் வெற்றி

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 77 (27.4) – சமீர சதமால் 31, துலின தில்சான் 2/07, ஹேசன் ஹெட்டியாரச்சி 2/10, கயான் பண்டார 2/16

இராணுவ கிரிக்கெட் கழகம் 78/3 (10.4) – அசேல குணரத்ன 25*, ஹிமாஷ லியனகே 2/10, கயான்  பண்டார 2/16

இராணுவ கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி