இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித்தொடரில் யாழ். வீரர் தீஷன் விதுசன் மீண்டும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
மூவர்ஸ் அணிக்காக விளையாடிவரும் தீஷன் விதுசன் கடற்படை அணிக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியில், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
>> மூவர்ஸ் அணிக்காக அறிமுக போட்டியில் விக்கெட்டுகளை குவித்த விதுசன்
இந்தநிலையில், இரண்டாவது போட்டியில் லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய பந்துவீச்சை மெழுகேற்றியிருந்தார்.
தற்போது நேற்று (06) நடைபெற்றுமுடிந்த செபஸ்தியன்ஸ் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு அபார பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை சுழல் பந்துவீச்சாளரான விதுசன், முதல் இன்னிங்ஸில் 19.2 ஓவர்களை வீசி 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
முதல் இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் செபஸ்தியன்ஸ் அணிக்கு கடுமையான சவாலை கொடுத்து 23 ஓவர்கள் பந்துவீசி 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, இந்தப்போட்டியில் 9 விக்கெட்டுகளை விதுசன் கைப்பற்றினார். அதேநேரம், ஒட்டுமொத்தமாக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள விதுசன், 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேவேளை, செபஸ்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூவர்ஸ் அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் 368 ஓட்டங்களை மூவர்ஸ் அணி பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செபஸ்தியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து போல வன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடியது. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் 183 ஓட்டங்களை செபஸ்தியன்ஸ் அணி பெற்றுக்கொள்ள, வெற்றியிலக்கான 14 ஓட்டங்களை மூவர்ஸ் அணி இலகுவாக கடந்து வெற்றியை பதிவுசெய்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<