பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை T20 போட்டிகளில் வழிநடாத்தும் சகலதுறை வீரரான மஹமதுல்லாஹ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
>>தென்னாபிரிக்க முன்னணி வீரருக்கு கொரோனா தொற்று
கடைசியாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயுடன் விளையாடிய டெஸ்ட் போட்டியில் அவ்வணி 220 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியொன்றினை பதிவு செய்ய பங்களிப்புச் செய்திருந்த மஹமதுல்லாஹ் குறித்த டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 150 ஓட்டங்கள் பெற்று, டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸினையும் பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் பங்களிப்புச் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலையே, மஹமதுல்லாஹ் தனது திடீர் ஓய்வினை அறிவித்திருக்கின்றார்.
மஹமதுல்லாஹ்வின் திடீர் ஓய்வு பங்களாதேஷ் அணியின் இரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருப்பதோடு அது தனக்கும் வருத்தத்தினை தருவதாக மஹமதுல்லாஹ் அவரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
”உயர்ந்த நிலைமை ஒன்றுக்கு போக நான் எப்போதும் விரும்பிய போதும், இதுதான் எனது டெஸ்ட் வாழ்க்கையினை நிறைவு செய்வதற்கு சிறந்த தருணம் எனக் கருதுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் டெஸ்ட் அணிக்கு திரும்பிய போது எனக்கு ஆதரவு வழங்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதோடு, எனது ஆற்றல் மீது நம்பிக்கை வைத்த அணி வீரர்களுக்கும், எனது அணி ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது பெருமையாக இருப்பதுடன், அந்த ஞாபகங்களை தொடர்ந்து என்னுடன் வைத்திருப்பேன்.”
மஹமதுல்லாஹ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை தொடர்ந்து ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>LPL தொடரின் பங்காளராகும் டயலொக்
கடந்த 2009ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்த மஹமதுல்லாஹ் இதுவரையில் 33.49 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 3,000 ஓட்டங்கள் வரை குவித்திருப்பதோடு, 43 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<