இளம் வீரர்களுக்காக மஹ்முதுல்லாஹ் அணியிலிருந்து வெளியேற்றம்

283
Mahmudullah rested for Ireland ODIs

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அயர்லாந்துக்கு எதிரான முதலிரெண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மஹ்முதுல்லாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி அந்த அணியுடன் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 3 T20i போட்டிகள் மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

ஒருநாள் தொடர் மார்ச் 18, 20 மற்றும் 23ஆம் திகதிகளில் சில்ஹெட்டிலும், T20i தொடர் 27, 29 மற்றும் 31ஆம் ஆகிய திகதிகளில் சட்டொக்ராமிலும், ஒற்றை டெஸ்ட் போட்டி ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை டாக்காவிலும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், தமிம் இக்பால் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட ஒருநாள் குழாத்தில் அனுபவ வீரரான மஹ்முதுல்லாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அயர்லாந்து அணியுடனான முதலிரெண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என அந்நாட்டு தேர்வுக் குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்தின் தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சகலதுறை வீரர் சமிம் ஹொசைன் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் தஜிஉல் இஸ்லாம் ஆகிய இருவரும் ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல, துடுப்பாட்ட வீரர்களான சகீர் ஹஸன் மற்றும் யாசிர் அலி, சுழல் பந்துவீச்சாளர் நசும் அஹ்மட் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் ஆகிய இருவரும் அயர்லாந்து ஒருநாள் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அயர்லாந்து ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் ஒருநாள் குழாத்தில் அனுபவ வீரர்களான சகிப் அல் ஹசன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் ஒருநாள் குழாம்

தமிம் இக்பால் (தலைவர்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சான்டோ, சகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், அபீப் ஹொசைன், யாசிர் அலி, தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அஹ்மட், தஸ்கின் அஹ்மட், எபாடொட் ஹொசைன், முஸ்தபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், சொரிபுல் இஸ்லாம், சகீர் ஹஸன்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<