இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது 27 பேர் கொண்ட தற்காலிக குழாமை இன்று (10) அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது கடந்த ஜூலை – ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. ஆனால் முழு உலகையும் உலுக்கிய கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் புரிந்துணர்வுடன் குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு சென்னை அணியுடன் இணைந்த தீபக் சஹார்
எதிர்வரும் ஒக்டோபரில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண தொடரானது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைவெளியில் ஐ.பி.எல் தொடரும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்துள்ளதன் அடிப்படையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சபையும் குறித்த தொடருக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது மொமினுல் ஹக் தலைமையிலான 27 பேர் கொண்ட தற்காலிக குழாத்தை பெயரிட்டுள்ளது. குறித்த தொடர் எதிர்வரும் ஒக்டோபரில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான போட்டி அட்டவணையை இதுவரையில் வெளியிடவில்லை.
வெளியிடப்பட்ட தற்காலிக குழாத்தில் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் மஹ்மதுல்லாஹ் ரியாத் இடம்பிடித்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் வெள்ளை நிற பந்து போட்டிகளில், அதாவது ஒருநாள், டி20 போட்டிகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில், சிவப்பு நிற போட்டிகளுக்கான, அதாவது டெஸ்ட் ஒப்பந்தத்தில் மஹ்மதுல்லாஹ்லின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் அடிப்படையில் மஹ்மதுல்லாஹ் தற்காலிக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
பாபர் அஸாமின் முதலிடத்தை பறித்த டாவிட் மலான்
அதேபோன்று புதிய டெஸ்ட் ஒப்பந்தத்தில் இடம்பெறாத அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான இளம் வீரர் முஸ்தபீசுர் ரஹ்மான் தற்போது தற்காலிக டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். இவர் நியூசிலாந்து அணியுடன் வெலிங்டனில் வைத்து இறுதியாக 2019 மார்ச் மாதமே டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழாமில் ஒன்பது வேகப்பந்துவீச்சாளர்களுடன், நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். குறித்த 27 வீரர்களில் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்காக இலங்கை பயணிக்கவுள்ளனர். அதற்கு முன்னர் குறித்த 20 வீரர்கள் பயிற்சி முகாமில் இணைவார்கள் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜூல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.
20 வீரர்கள் கொண்ட பங்களாதேஷ் அணியானது செப்டெம்பர் 27ஆம் திகதி இலங்கை நோக்கி பயணிக்கிறது. இலங்கை வந்ததும் டெஸ்ட் தொடருக்காக 17 வீரர்கள் பெயரிடப்படவுள்ளதாகவும், ஏனைய 3 வீரர்களும் மீண்டும் பங்ளாதேஷ் நோக்கி திரும்பவுள்ளதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தேர்வுக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் பங்களாதேஷ் குழாம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இலங்கை A அணியுடன் மூன்று நாள் கொண்ட டெஸ்ட் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது ஒக்டோபர் 24ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான குழாத்தை அறிவித்த இங்கிலாந்து!
பங்களாதேஷ் அணியின் 27 பேர் கொண்ட தற்காலிக குழாம்.
மொமினுல் ஹக் (அணித்தலைவர்), தமீம் இக்பால், சத்மன் இஸ்லாம், சைப் ஹஸன், இம்ருல் கைஸ், சௌமியா சர்கர், முஸ்பிகூர் ரஹீம், மொஹமட் மிதுன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹஸன் சன்டோ, மொஸாதிக் ஹொஸைன், மஹ்மதுல்லாஹ் ரியாத், யாஸிர் அலி, நூருல் ஹஸன், மொஹ்தி ஹஸன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், சன்ஜமுல் இஸ்லாம், நயீம் ஹஸன், முஸ்தபீசுர் ரஹ்மான், ருபல் ஹூஸைன், சபியுல் இஸ்லாம், தஸ்கின் அஹமட், அல் அமீன் ஹொஸைன், மொஹமட் சைபுதீன், எபாதத் ஹொஸைன், அபு ஜெயித், ஹஸன் மஹ்முத்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<