ஆட்டநிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்தவினால் பொலிஸ் முறைப்பாடு

428

2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக இலங்கையின் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேவினால் வெளியிடப்பட்ட தகவலையடுத்து உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.   

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்

இதனையடுத்து, அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய விளையாட்டு குற்றங்களை தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் முறைப்பாடு செய்தார்

உலகக் கிண்ண ஆட்டநிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் நாவலப்பிட்டியவிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று (24) காலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.  

இந்த நிலையில், தன்னால் முன்வைக்கப்பட்ட தகவலுக்கான ஆதரங்களுடன் 6 பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டை மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று பொலிஸ் விசேட பிரிவிடம் கையளித்தார்.   

இதன்படி, முன்னாள் அமைச்சரினால் வாக்குமூலத்துக்கு அமைய விளையாட்டில் இடம்பெறும் தவறுகள் (மோசடிகள்) தொடர்பாக பொலிஸ் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.  

இந்த நிலையில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் நாவலப்பிட்டியவில் உள்ள மஹிந்தானந்த மன்றத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே, 24 விடயங்களை உள்ளடக்கியதாக ஆறு பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டை விசாரணைப் பிரிவிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்தார்

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற ஆட்டநிர்ணயம் தொடர்பில் நான் ஆறு பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டொன்றை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரிடம் கையளித்தேன். அதில் முறைப்பாட்டுடன் தொடர்புபட்ட 8 விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.  

எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் அதுதொடர்பான அறிக்கைகளை தன்னால் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த முடியாது” என அவர் தெரிவித்தார்.  

மேலும், 2011 உலகக் கிண்ணத்தில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றது தொடர்பில் நான் வெளியிட்டிருந்த கருத்தை அடுத்து பல அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் எனக்கு சேறு பூசும் வகையில் நிறைய விடயங்களை சொல்லியிருந்தனர்

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

தற்போது என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும். எனக்கு கிடைத்த தகவல்களையும் நான் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் கொடுத்துவிட்டேன்.   

முன்னதாக, .சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவின் பிரதானியான அலெக்ஸ் மாஷலினால் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஹரீன் பெர்னாண்டோவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கிடைத்தது. அதன்பிறகு தான் நான் 2011 உலகக் கிண்ண ஆட்டநிர்ணயம் தொடர்பில் வாய் திறந்தேன்

உலகில் டெஸ்ட் விளையாடுகின்ற பன்னிரெண்டு நாடுகளில் ஆட்டநிர்ணயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் பெயரும் இருப்பதால், அதுதொடர்பான விசேட விசாரணைகளை ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் முன்வந்தேன். இந்த நாட்டின் விளையாட்டை நேசிக்கின்ற ஒரு பிரஜையாக இதுதொடர்பில் பேசுவதற்கு முன்வந்தேன்.

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியைப் பார்வையிட முன்பை வான்கடே மைதானத்துக்கு ஒரு இரசிகனாக நானும் சென்றிருந்தேன். போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆட்டநிர்ணயம் இடம்பெற்றிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது

மறுநாள் இலங்கைக்கு வந்தபிறகு என்னை சந்திக்க நிறைய பேர் வருகை தந்திருந்தனர். குறிப்பாக, இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அதுதொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்

இதனையடுத்து, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக நான் 2011 ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி .சி.சிக்கு முறைப்பாடு செய்தேன். அதற்கான கடிதமும் என்னிடம் உள்ளது. தொடர்ந்து 2013 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆட்டநிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுர ஜயசேகர தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை நான் நியமித்தேன்.  

குறிப்பாக, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றிருக்கலாம் என 2014 மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் நான் வெளிப்படையாக சொல்லியிருந்தேன். அது இலங்கையில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும், ஒருசில தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகியிருந்தன

லங்கன் ப்ரீமியர் லீக்கிற்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்!

எனவே அந்தக் காலப்பகுதியில் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சராக என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தேன். தற்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் விரைவில் உரிய நபர்களை அழைத்து விசாரணை செய்வார்கள். தயவுசெய்து இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம்” என அவர் தெரிவித்தார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<