கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியில் இலங்கை கால்பந்து அணியின் கோல் காப்பாளர் மஹேந்திரன் தினேஷ் உபாதைக்கு உள்ளாகியுள்ளதுடன், சுஜான் பெரேரா பயிற்சிக்கு திரும்பியுள்ளார் என்ற இரண்டு செய்திகளையும் இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
தகவல்களை கசியவிடுபவரைத் தேடும் FFSL
இலங்கை பொலிஸ் அணி 2019 ஆம் ஆண்டு எப்.ஏ. கிண்ணத்தை சுவீகரிக்க முக்கிய காரணமாக இருந்த மஹேந்திரன் தினேஷ், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோல் காப்பாளருக்கான பயிற்சிகளில் ஈடுபடும் போது, தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த இவரின் உபாதை குணமடைவதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இவர் ஓய்வில் இருக்க வேண்டும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் இளம் கோல் காப்பாளர் அணியிலிருந்து உபாதை காரணமாக வெளியேறியுள்ள நிலையில், அணியின் உப தலைவர் சுஜான் பெரேரா பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு பின்னர், பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
சுஜான் பெரேரா மாலைதீவுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்றிருந்த நிலையில், கொவிட்-19 காரணமாக அங்கு தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நாட்டுக்கு திரும்பியிருந்தார். இவர், 300 இலங்கையர்களுடன் நாட்டுக்கு திரும்பியிருந்தார்.
எனினும், இங்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சுஜான் பெரேரா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் வந்த குழுவில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதால், மீண்டும் 14 நாட்களுக்கு இவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
கொவிட்-19 ஊரடங்கு மற்றும் தனிப்பட்ட விடயங்கள் காரணமாக சுமார் 5 மாதங்களுக்கு பின்னர், கடந்த ஜூன் 16 ஆம் திகதி சுஜான் பெரேரா இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<