இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளராக இருக்கும் மஹேல ஜயவர்தன, T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் சுபர் 12 சுற்றுப் போட்டிகள் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
அதன்படி சுபர் 12 சுற்று தொடர்பில் இலங்கை வீரர்கள் நல்ல மனநிலையுடன் இருப்பதாக தெரிவித்த மஹேல ஜயவர்தன, இந்த T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் பெற்ற தோல்வியின் பின்னர் தவறாக சென்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
“முதல் போட்டியின் தோல்விக்குப் பின்னர், நாங்கள் என்ன விடயங்கள் தவறாக சென்றது என்பது பற்றியும், விஷேடமாக அவுஸ்திரேலிய நிபந்தனைகளில் (Australian Conditions) எமது அணுகுமுறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாடினோம்.”
இலங்கை மோதலில் அயர்லாந்து அணியின் ஆதிக்கமா?
பெதும் நிஸ்ஸங்கவின் உபாதை குறித்தும் பேசிய மஹேல ஜயவர்தன, மருத்துவ அதிகாரிகளின் சோதனையின் பின்னர் அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான மோதலில் விளையாடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறியிருக்கின்றார்.
இதேநேரம் உபாதைக்குள்ளாகும் வீரர்களை பிரதியீடு செய்ய இன்னும் வீரர்கள் இலங்கையில் இருந்து அழைக்கப்பட்டு தயார் நிலையில் வைத்திருக்கப்படுவர் என்றும் மஹேல குறிப்பிட்டிருக்கின்றார்.
“நாங்கள் எங்கள் திட்டங்களை மைதானங்களை வைத்தும், நிபந்தனைகளை வைத்தும் வீரர்கள் வெளிப்படுத்தும் ஆட்டத்தை வைத்தும் மாற்றுகின்றோம்.” என மஹேல குறிப்பிட்டார்.
CLIPS – இலங்கை அணியின் அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யார்?
அத்துடன் அடுத்த சுற்றுக்கு செல்ல மூன்று வெற்றிகளை இலங்கை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட மஹேல ஜயவர்தன நான்கு வெற்றிகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை தமது அரையிறுதி வாய்ப்பை இலகுவாக உறுதி செய்ய முடியும் எனக் கூறியிருந்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<