விளையாட்டுத்துறை அமைச்சரின் அழைப்பை நிராகரித்த மஹேல, முரளி, மஹநாம

969

இலங்கை கிரிக்கெட்டுடன் (SLC) இணைந்து பணியாற்ற வருமாறு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹநாம ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த புதன்கிழமை (13) முன்னாள் இலங்கை அணி நட்சத்திரங்களான மஹேல ஜயவர்தன, அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோரின் சேவைகள் தமக்கு மிகவும் தேவையாக உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு பைசர் முஸ்தபா அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது. இந்த கடிதத்தை பரிசீலனை செய்த அமைச்சர் குறித்த வீரர்களை இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆலோசகர்களாக இணைந்து கடமையாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.  

இலங்கை கிரிக்கெட்டுக்கு வேலை செய்ய சங்காவையும், மஹேலவையும் அழைக்கும் பைசர் முஸ்தபா

அமைச்சரினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்புக்கு தற்போது குறித்த முன்னாள் வீரர்களில் மூவர் பதில் தந்திருக்கின்றனர். இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,957 ஓட்டங்களை இலங்கை அணிக்காக கடந்த மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் கணக்கில், “எனக்கு இந்த முறைமை (நிர்வாகம்) மீது எந்த நம்பிக்கையும் இல்லை. யாருக்காவது நேரத்தை இன்னும்  செலவிட முடியுமாக இருந்தால் எங்களை அதற்கு பாவித்து விடாதீர்கள்“ எனக் கூறியிருந்தார். மஹேலவின் இந்த கருத்து அவருக்கு விளையாட்டு அமைச்சரின் அழைப்பில் ஆர்வம் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இதேவேளை, ஐ.சி.சி. வரலாற்று நாயகர் விருதினை (Hall of Fame) வென்றிருக்கும் இலங்கை அணியின் சுழல் ஜாம்பவானான முத்தையா முரளிதரனும் அமைச்சரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கதைத்திருந்த அவர், எனது பார்வையில் இந்த அழைப்பானது நேர்மையான ஒன்றாக இருப்பதாக தெரியவில்லை, இது ஒரு தந்திரமான நகர்வாகும், எங்களை கிரிக்கெட்டின் நிர்வாகம் மிகவும் மோசமாக இருக்கின்ற நிலையில் பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றனர்“ என்றார்.

முரளியை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசராக வர முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் 1996 ஆம் ஆண்டு  உலகக் கிண்ண வெற்றிக் குழாமில் இடம்பிடித்திருந்த முன்னாள் துடுப்பாட்ட வீரரான ரொஷான் மஹாநாமவும் அமைச்சரின் அழைப்பில் தனக்கு விருப்பமில்லாது இருப்பதனை கடிதம் ஒன்றின் மூலம் உறுதி செய்திருக்கின்றார். எனினும், தனது கடிதத்தில் மஹநாம இலங்கை கிரிக்கெட் தற்போது எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை சரி செய்தால் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் சேர்ந்து பணியாற்றுவது பற்றி  யோசிக்க முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இராஜினாமா

முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் மோசமான பதிவுகளை காட்டிவருகின்றது. சரிவிலிருக்கும் இலங்கை அணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் ஒரு அங்கமே இலங்கையின் முன்னணி வீரர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதாகும்.

விளையாட்டு அமைச்சரின் வேண்டுகோளை தற்போது மூவர் நிராகரித்த நிலையில் குமார் சங்கக்கார மற்றும் அரவிந்த டி சில்வா ஆகிய இருவரிடமும் இருந்து இதுவரையில் எந்த பதில்களும் வரவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<