இலங்கையின் மத்திய வரிசையை மாற்றிய மஹேல

ICC T20 World Cup – 2021

637

இம்முறை T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணியின் மத்திய வரிசையில் ஒருசில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கடந்த சில போட்டிகளில் நன்கு அவதானிக்க முடிந்தது.

இதற்கான முக்கிய காரண கர்த்தா இலங்கை அணியின் ஆலோசகரான மஹேல ஜயவர்தன தான் என இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில், இலங்கை அணியின் மத்திய வரிசையை மாற்றியமைத்தமை தொடர்பில் மஹேல ஜயவர்தன முதல் முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்குமுன் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகச் செயல்பட்ட அவிஷ்க பெர்னாண்டோ, ஓமான் அணியுடனான T20i தொடரிலிருந்து 4ஆம் இலக்க வீரராக விளையாடி வருகின்றார். இதில் அவர் இறுதியாக விளையாடிய போட்டிகளில் முறையே 83, 33, 62, 61, மற்றும் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதுவரை காலமும் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயல்பட்ட அவிஷ்க பெர்னாண்டோவை மஹேல ஜயவர்தனவின் ஆலோசனைக்கு அமையவே 4ஆம் இலக்க வீரராக களமிறக்கியதாக மிக்கி ஆர்தர் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

அவிஷ்க பெர்னாண்டோ ஆடுகளத்திற்கு வந்து ஓட்டங்களைக் குவிப்பதற்கு சிறிது காலம் தேவைப்பட்டதன் காரணத்தால் தான் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை அணியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முக்கிய மாற்றம் தான் இதற்கு முன்பு 3ஆம் இலக்கத்தில் களமிறங்கிய பானுக ராஜபக்ஷவை 5ஆம் இலக்க வீரராக பயன்படுத்தியது.

ஆகவே, இந்த முக்கிய இரண்டு தீர்மானங்களுக்கும் கிடைத்த பிரதிபலனாக நேற்றுமுன்தினம் (18) நடைபெற்ற நமீபியாவுடனான போட்டியில் நான்காவது விக்கெட்டுக்காக பிரிக்கப்பட்டாத 74 ஓட்டங்களை இந்த இரண்டு வீரர்களும் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதில் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை எடுத்தார்.

இந்த நிலையில், நமீபியாவுடனான போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தன்னுடைய துடுப்பாட்டம் பற்றியும், மஹேல ஜயவர்தனவின் வருகை பற்றியும் பானுக ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,

”மஹேல ஜயவர்தன அணியில் இணைந்த நாளிலிருந்து, அவர் அணியில் பல மாற்றங்களைச் செய்தார். என்னை 5ஆம் இலக்கத்திலிலும், அவிஷ்கவை 4ஆம் இலக்கத்திலும் களமிறக்கினார். அதேபோல, பெத்தும் நிஸ்ஸங்கவை ஆரம்ப வீரராக விளையாடச் செய்வதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகள் மற்றும் பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கங்களில் நாங்கள் களமிறங்கி 5-6 போட்டிகளில் விளையாடினோம். எனவே, விளையாட்டு மைதானத்தின் ஸ்திரத்தன்மைப் பொறுத்து விளையாடுவது தான் இங்கு முக்கியம்” என அவர் தெரிவித்தார்.

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுகின்ற மஹேல ஜயவர்தன, IPL வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

இதனிடையே, ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த IPL தொடர் நிறைவடைந்த கையோடு மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணைந்துகொண்டார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் உயிர் பாதுகாப்பு வலயத்தை விட்டு விலகுவார். ஆனால், அவர் தொடர்ந்து இலங்கை அணியுடன் இருந்து நெருக்கமான முடிவுகளை எடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் நுட்பங்களைக் கையாள்வதில் நிபுணராகக் கருதப்படும் மஹேல ஜயவர்தன, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியுடன் இணைந்து கொண்டமைக்காக பலரால் பாராட்டப்பட்டார். குறிப்பாக, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கின்ற அவர் தேசிய விளையாட்டுக் பேரவைன் தலைவராகவும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணைந்து கொண்டமை மற்றும் இலங்கை அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

”மஹேலவிடமிருந்து எங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கிறது. எமது அணியை மட்டுமல்ல, எதிர் அணியையும் பகுப்பாய்வு செய்யப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர் தனது சொந்த வழியில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கிறார். அவர் ஏற்கனவே அணிக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறார். அவரிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெறுவோம் என்று நம்புகிறோம்” என தசுன் ஷானக கூறினார்.

”மஹேல அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பைச் செய்கிறார். நான் அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். அதற்கு முக்கிய காரணம், அவர் விளையாடும் காலத்திலிருந்தே நான் அவருடன் பணிபுரிந்து வருகிறேன். ஒரு போட்டியை பகுப்பாய்வு செய்கின்ற அபரிமிதமான திறமை அவரிடம் உள்ளது. அவரது கிரிக்கெட் அறிவு ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் கிரிக்கெட் பற்றி நிறைய விடயங்களைப் பேசினோம்” என மிக்கி ஆர்தர் தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி, முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் இன்று (20) அயர்லாந்து அணியை சந்திக்கவுள்ளது.

அபுதாபியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<